புத்ராஜெயா, ஆகஸ்ட் 20 – கிழக்கு உக்ரைன் அருகே எம்எச்17 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட போது, அது விழுந்து நொறுங்கிய வேகத்தில் அதிலிருந்து பயணிகள் சிலரின் எலும்புகள் நொறுங்கி இரண்டு அடி ஆழத்திற்கு மண்ணுக்குள் புதைந்து விட்டதாக டி13 பிரிவின் தலைமைத் துணை இயக்குநர் ஹுசைன் ஓமார் கான் தெரிவித்துள்ளார்.
மலேசியக் காவல்துறையில் பேரிடரில் பாதிக்கப்பட்டோர் அடையாளம் காணும் பிரிவைச் சேர்ந்த அவர், எம்எச்17 பேரிடர் விசாரணைக்குத் தலைமை வகிக்கிறார்.
கடந்த ஏப்ரல் மாதம் எம்எச்17 பேரிடரின் இறுதிக்கட்ட விசாரணைகளின் போது பயணிகளின் சிலரின் எலும்புகள் மண்ணுக்குள் புதைந்து இருந்ததை மீட்புக் குழுவினர் கண்டறிந்துள்ளதாகவும் ஹுசைன் ஓமார் தெரிவித்துள்ளார்.
இறுதிக்கட்ட விசாரணை வரை, மொத்தம் 296 பயணிகளின் அடையாளங்கள் காணப்பட்டுள்ளதாகவும், இரண்டு பயணிகளை அடையாளம் காண முடியவில்லை என்றும் ஹூசைன் குறிப்பிட்டுள்ளார்.