வாஷிங்டன் – நேற்று நடைபெறவிருந்த இந்தியா-பாகிஸ்தான் இடையிலான பேச்சுவார்த்தை திடீரென ரத்து செய்யப்பட்டது. இது ஏமாற்றம் அளிப்பதாக அமெரிக்கா கருத்துத் தெரிவித்துள்ளது.
சென்ற மாதம் ரஷியாவின் உபா நகரில் பிரதமர் நரேந்திர மோடிக்கும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கும் இடையே இந்தியா- பாகிஸ்தானுக்கு இடையிலான பிரச்சினைகள் குறித்த பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது இரு நாட்டுத் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் மட்டத்திலான பேச்சுவார்த்தையை இந்தியாவில் நடத்த முடிவெடுக்கப்பட்டது.
அதன்படி நேற்று இரு நாடுகளுக்கான பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், இந்தப் பேச்சுவார்த்தைக்கு முன்பு பாகிஸ்தான், இந்தியாவிலுள்ள காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர்களைச் சந்திக்க நடவடிக்கை மேற்கொண்டது. மேலும் இந்தப் பேச்சுவார்த்தையில், காஷ்மீர் விவகாரத்தை முக்கிய பிரச்சினையாக எடுத்துக் கொள்ள வேண்டும் எனப் பாகிஸ்தான் நிபந்தனை விதித்தது.
ஆனால், இந்தியா இதை ஏற்க மறுத்தது . இதனால் பாகிஸ்தான், இந்தப் பேச்சுவார்த்தையை ரத்து செய்தது.
இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியிருப்பதாவது:
ரஷ்யாவின் உஃபா நகரில் நடைபெற்ற இரு நாட்டுப் பிரதமர்கள் இடையேயான பேச்சுவார்த்தையின்போது, பயங்கரவாதம் குறித்து இருநாட்டுப் பாதுகாப்பு ஆலோசகர்களும் ஆலோசனை நடத்துவார்கள் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அதற்கு மாறாக காஷ்மீர் விவகாரத்தைப் பாகிஸ்தான் எழுப்புகிறது.
பாகிஸ்தானுடன் பயங்கரவாதம் குறித்து மட்டுமே பேசுவது என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது” என்று கூறியுள்ளார்.
இந்நிலையில், இந்தப் பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டது அமெரிக்காவிற்கு வருத்தம் அளிப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறைச் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
“உபா நகரில் இரு நாட்டுத் தலைவர்களிடையே நடந்த பேச்சுவார்த்தையின் போது, தேசிய ஆலோசகர் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டதை நாங்கள் வரவேற்றோம்.
ஆனால், இந்தியா-பாகிஸ்தான் இடையே நடைபெற இருந்த பாதுகாப்பு ஆலோசகர் மட்டத்திலான பேச்சுவார்த்தை திடீரென ரத்து செய்யப்பட்டதால், நாங்கள் ஏமாற்றம் அடைந்துள்ளோம். இரு தரப்புப் பேச்சுவார்த்தையை இரு நாடுகளும் மீண்டும் தொடங்க வேண்டும்” என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.