திண்டுக்கல் – வயல்களுக்குப் பாயும் நீர்ப்பாசன வாய்க்காலையும் புறம்போக்கு நிலத்தையும் ஆக்கிரமித்துள்ளதாக நடிகர் மாதவன் மீது பழனி வட்டார விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.
இப்புகாரையடுத்து, இது தொடர்பான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன்.
கொடைக்கானலில் இருந்து பழனி செல்லும் வழியில் இயற்கை எழில் மிகுந்த பகுதியில் நடிகர் மாதவன் 7 ஏக்கர் நிலம் வாங்கி அதைச் சுற்றி வேலி அமைத்துள்ளார்.
அவரது நிலம் அமைந்துள்ள தேக்கன் தோட்டம் என்னும் பகுதியில் டிடிஎல் நீர்ப்பாசன வாய்க்கால் உள்ளதாகக் கூறப்படுகிறது.
கொடைக்கானல் மலையிலிருந்து பழனி பகுதியில் உள்ள கண்மாய்களுக்கு இந்த வாய்க்கால் மூலம் நீர் பாய்ந்து தேங்கும். இதன் மூலம் அப்பகுதியிலுள்ள 50 ஏக்கர் நஞ்சை நிலங்கள் பாசன வசதி பெற்று வந்தன.
மாதவன் அந்த வாய்க்காலை உள்ளடக்கி மின் வேலி அமைத்து விட்டதால் நீர்பாசனம் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
மேலும், அப்பகுதியில் விளை பொருட்களை வைப்பதற்கு அவர்கள் பயன்படுத்தி வந்த களம், புறம்போக்கு நிலங்களையும் மாதவன் ஆக்கிரமித்துக் கொண்டதாகக் குற்றம்சாட்டுகின்றனர்.
இதற்கு வருவாய்த்துறை அலுவலர்கள் சிலர் நடிகர் மாதவனுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், அப்பகுதியிலுள்ள நிலங்களை மாதவனுக்கு விற்கச்சொல்லி அவர்கள் மறைமுகமாக நெருக்கடி கொடுப்பதாகவும் புகார் தெரிவித்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தலைமையில் நடந்த மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் இத்தகைய புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்புகாரை அடுத்து மாவட்ட ஆட்சியர் இதுதொடர்பாக வருவாய், பொதுப்பணித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.