கொழும்பு- 2009ஆம் ஆண்டு இலங்கை ராணுவத்திற்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடைபெற்ற இறுதிக்கட்டப் போரில் பல்லாயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டனர்.
இது போர் விதிமுறை மீறல் என்றும், மனித உரிமை மீறல்கள் என்றும், இதுகுறித்துச் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கடந்த ஆண்டு ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்தது.
ஆனால், கடந்த வாரம் அமெரிக்கா திடீரெனத் தனது நிலையை மாற்றிக் கொண்டு, இலங்கையின் இறுதிக்கட்டப் போர் விவகாரத்தில் உள்நாட்டு விசாரணையே போதும் என்று கூறியது.
அதற்குத் தமிழக அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், இலங்கையில் தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் வடக்கு மாகாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் கட்சி முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் மாகாண சபைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் உள்நாட்டு விசாரணையை எதிர்த்துத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
“இறுதிக்கட்டப் போரில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் குறித்து உள்நாட்டு விசாரணை நடத்தலாம் என்று அமெரிக்கா கூறுவதை ஏற்றுக் கொள்ளமுடியாது. உள்நாட்டு விசாரணை நம்பகத்தன்மையோடு நடைபெறும் என்பதில் நம்பிக்கை இல்லை. அதற்குச் சட்ட ரீதியான வாய்ப்பும் இல்லை.
இறுதிக்கட்ட போரில் தமிழ் மக்களுக்கு எதிராகப் போர்க்குற்றம் புரிந்தவர்களை விசாரிக்க சர்வதேச விசாரணையே சரியானதாகும். அதில்தான் நீதியும் கிடைக்கும்.
அதற்காக அனைத்துலக நாடுகளுடன் இணைந்து செயல்பட்டு, இந்த நாட்டை அமைதியான- இணக்கமான பாதையில் வழி நடத்திச் செல்ல புதிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கூறி இத்தீர்மானத்தை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் முன் மொழிந்தார்.
அதனை மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் வழி மொழிந்தார்.