சென்னை – கமல்ஹாசனின் படங்கள் பொதுவாக 100 நாட்களுக்கும் மேலாகப் படப்பிடிப்பு நடக்கும்.அதன்பிறகு படத் தொகுப்பு, பின்னணிக் குரல் சேர்ப்பு, பின்னணி இசை, கிராபிக்ஸ் என அதற்கும் இரண்டு மூன்று மாதங்கள் ஆகும்.
பட வேலைகள் முடிந்து வெளியாவதற்கு எப்படியும் ஒரு வருடத்திற்கும் மேலாகிவிடும். அந்தப் போக்கிலிருந்து கமல்ஹாசன் தற்போது விடுபட்டு வந்திருக்கிறார்.
இனி ஒரு படத்தின் படப்பிடிப்பை 100 நாட்கள், 200 நாட்கள் என இழுக்கப் போவதில்லை. அதிகபட்சம் நாற்பது நாட்களில் முடிக்கப் போவதாகத் தெரிவித்திருக்கிறார்.
அவருக்குள் இவ்வளவு பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்திருப்பது பாபநாசம் படம் என்கிறார்கள்.
பாபநாசம் படம் வெறும் 40 நாட்களில் எடுக்கப்பட்டு, நல்ல லாபம் சம்பாதித்துக் கொடுத்தது.
இப்போது அவர் நடித்து வரும் தூங்கா நகரம் படத்தின் படப்பிடிப்பும் நாற்பது நாட்களுக்குள் முடிக்கப்பட்டுவிட்டது. விரைவில் வெளியாகத் தயாராகி வருகிறது.
இதுபற்றிக் கமல்ஹாசன் வெளிப்படையாகப் பேசியிருக்கிறார்.
அதாவது: “இத்தனை நாட்கள் ஒரு தவறான பாதையில் போய்க் கொண்டிருந்தோம் என்பதை ஒப்புக் கொள்கிறேன். 100 நாட்கள், 200 நாட்கள் படமெடுத்தால்தான் பிரம்மாண்டம் காட்ட முடியும் என்று சொன்னதைக் கேட்டு அப்படி எடுத்தோம்.
ஆனால் ஹாலிவுட்டில் 50 நாட்களுக்குள் ஜேம்ஸ்பாண்ட் படங்களையே எடுத்து முடித்துவிடுகிறார்கள்
இருநூறு நாட்கள் எதற்குப் படப்பிடிப்பு நடத்தவேண்டும்? படமே அதிகபட்சம் நூறு நாட்கள்தான் ஓடுகிறது. அதுவும் இப்போது 25 நாளாகக் குறைந்து விட்டது.
எனவே, இனிவரும் படங்களையும் இதேபோல் குறுகிய காலத்தில் வேகமாக எடுத்துவிடவேண்டும் என்று நினைத்துக்கொண்டிருக்கிறேன் ” என்று சொல்லியிருக்கிறார்.
பார்க்கலாம்; அடுத்த படத்தை எவ்வளவு நாளில் முடிக்கிறாரென்று!