கோலாலம்பூர் – வாட்சாப் பயனாளிகளின் எண்ணிக்கை 900 மில்லியனைத் தாண்டியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வளர்ந்த நாடுகளிலும், வளரும் நாடுகளிலும் திறன்பேசி பயன்படுத்தாதவர்களின் எண்ணிக்கை பெருவாரியாக குறைந்து விட்டது. அதேபோல், திறன்பேசி வைத்திருப்பவர்களில் வாட்சாப் பயன்படுத்தாதவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம் என்கிற அளவிற்கு வாட்சாப் பெரிய அளவில் வளர்ந்துள்ளது.
அதற்கு ஆதாரமாகத் தான் பயனர்களின் எண்ணிக்கை 900 மில்லியனைத் தாண்டியதாக வெளியாகி உள்ள அறிவிப்பு. இந்த 900 மில்லியனில் ஏறக்குறைய 100 மில்லியன் பயனர்கள் கடந்த சில மாதங்களில் சேர்ந்தவர்கள் தான் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.
இதனை வாட்சாப் இணை நிறுவனர் ஜேன் கௌம் தனது அறிக்கையில் உறுதிபடுத்தி உள்ளார். வாட்சாப்பின் இந்த வளர்ச்சிக்கு பேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் தனது பேஸ்புக் பக்கத்தில், “வாட்சாப் குழுமம் 900 மில்லியன் பயனர்களை எட்டி உள்ளது. இதற்காக ஜேனுக்கு எனது வாழ்த்துக்கள்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு, பிப்ரவரி மாதம் பேஸ்புக் நிறுவனம் வாட்சாப்பை, 19 பில்லியன் டாலர்களுக்கு வாங்கியது குறிப்பிடத்தக்கது.