கோலாலம்பூர் – மலிவு விலை விமானப் போக்குவரத்து நிறுவனமான ஏர் ஆசியா, இந்தியாவின் பிரபல சுற்றுலாத் தளமான கோவாவிற்கு, கோலாலம்பூரில் இருந்து முதல் முறையாக நேரடி விமானப் போக்குவரத்தை தொடங்கி உள்ளது. மேலும், இந்த வழித்தடத்தை பிரபலப்படுத்தும் நோக்கத்துடன், அடிப்படைக் கட்டணமாக 12 ரிங்கிட் (ஒரு வழிப்பயணங்களுக்கு மட்டும்) நிர்ணயித்துள்ளது.
இது குறித்து ஏர் ஆசியா தலைவர் டோனி பெர்னாண்டஸ் கூறுகையில், “கோவா மீது எனக்கு எப்போதும் தனிப்பட்ட விருப்பம் உண்டு. கோவா, இந்தியாவின் மிகச் சிறந்த சுற்றுலாத் தளம். அதனால், அங்கு வாரத்திற்கு மூன்று முறை நேரடி விமானப் போக்குவரத்தை தொடங்கி உள்ளோம். இதன் மூலம், இந்தியாவிற்கு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை பெரும் என எதிர்பார்க்கிறோம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்த மலிவு விலைக் கட்டணத்தை பெறுவதற்கு செப்டம்பர் 6-ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். இச்சலுகையில், செப்டம்பர் 7-ம் தேதி முதல் நவம்பர் 30-ம் தேதிக்குள் பயணிக்க முடியும். மேலும், 12 ரிங்கிட் என்பது அடிப்படைக் கட்டணம் தான். வரிகள் மற்றும் இதர கட்டணங்கள் கூடுதலாக நாம் செலுத்த வேண்டியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.