சென்னை – துபாயிலிருந்து, கோலாலம்பூர் நோக்கி வந்து கொண்டிருந்த எமிரேட்ஸ் ஏர்வேஸ் விமானம் ஒன்று இன்று அவசரமாக சென்னையில் தரையிறங்கியது. அந்த விமானத்தில் இருந்த 61 வயது பயணி ஒருவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டத்தைத் தொடர்ந்து, அந்த விமானம் சென்னையில் அவசரமாகத் தரையிறங்கியது.
எமிரேட்ஸ் விமான நிறுவனத்தின் மாதிரி விமானம் ஒன்று….
EK346 என்ற பயண வழித் தடத்தைக் கொண்ட அந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, பயணி ஒருவர் நெஞ்சு வலிப்பதாக விமானப் பணியாளர்களிடம் கூறியிருக்கின்றார். இதைத் தொடர்ந்து, விமானம் பறந்து கொண்டிருந்த இடத்திலிருந்து மிக அருகிலிருந்த விமான நிலையமாக சென்னை இருந்ததால், அங்கிருந்த விமானக் கட்டுப்பாட்டு கோபுரத்துடன் தொடர்பு கொண்ட விமானி, சென்னை விமான நிலைய அதிகாரிகள் அனுமதியைப் பெற்ற பின்னர், சென்னை விமான நிலையத்தில் அவசரமாக விமானத்தைத் தரையிறக்கினார்.
நெஞ்சு வலிப்பதாகக் கூறிய துபாய் பயணிக்கு விமான நிலையத்திலேயே முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னர் அவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
அதன் பின்னர் எஞ்சிய 115 பயணிகளுடன் எமிரேட்ஸ் விமானம் தனது பயணத்தைத் தொடர்ந்ததாக, இந்தியாவின் என்டிடிவி செய்தித் தளம் தகவல் வெளியிட்டிருக்கின்றது.