லண்டன் – பயங்கரவாத இயக்கமான ஐஎஸ்ஐஎஸ் குழுவில் இடம்பெற்றிருந்ததோடு, இங்கிலாந்தில் சதி நாச வேலைகளில் ஈடுபட்டிருந்த, தங்கள் நாட்டைச் சேர்ந்த இருவரை, ஆளில்லா விமானங்களை ஏவி கொன்றுள்ளது பிரிட்டன் அரசாங்கம்.
இந்தத் தகவலை அந்நாட்டு பிரதமர் டேவிட் கேமரூன் நேற்று திங்கட்கிழமை வெளியிட்டுள்ளார்.
இந்த இராணுவ நடவடிக்கை குறித்து நாடாளுமன்றத்தில் தீர்மானம் எதுவும் கொண்டுவரவில்லை என்று குறிப்பிட்டுள்ள கேமரூன், சிரியாவில் வான் வழியாக ஆளில்லா விமானங்களைக் கொண்டு தாக்குதல் நடத்தியது பிரிட்டனுக்கு இதுவே முதல்முறை என்றும் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் பிரிட்டிஷ் விமானப் படை (ஆர்ஏஎப்) , இந்த ஆளில்லா விமானங்களை ஏவி, அந்த இருவரையும் கொன்றதாக கேமரூன் தெரிவித்துள்ளார்.
“தீவிரவாதிகள் இயக்கத்திற்காக எங்கள் வீதிகளில் கொலைகளை நடத்துகின்றனர். அவர்கள் தடுத்து நிறுத்த இயலவில்லை. வேறு வழியின்றி தான் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளோம். இந்த வான் வழித் தாக்குதல் முற்றிலும் சட்டத்திற்குட்பட்டது” என்று கேமரூன் குறிப்பிட்டுள்ளார்.