புதுடில்லி – இந்தியாவிற்கான சவுதி அரேபியா தூதரக அதிகாரி, நேபாள நாட்டு வேலைக்காரப் பெண்கள் இருவரை வீட்டில் அடைத்து வைத்து வன்புணர்வுக்கு ஆளாக்கியதாகத் தாயும் மகளுமான அப்பெண்கள் புகாத் தெரிவித்துள்ளதால், சவுதி அரேபியத் தூதர் மற்றும் அவரது குடும்பத்தார் மீது பாலியல் குற்றவியல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அப்பெண்கள் இருவரும் 4 மாதங்களுக்கு முன்புதான் அங்கு வேலைக்குச் சேர்ந்ததாகவும், வேலைக்குச் சேர்ந்த சில நாட்களிலேயே தூதரக அதிகாரி அவர்களிடம் குரூரமாக நடந்து கொண்டதாகவும், அதற்கு அவரது மனைவியும் மகளும் உடந்தை எனவும் அவர்கள் குற்றம் சாட்டினர்.
4 மாதங்களாகச் சித்ரவதை அனுபவித்து வந்த அப்பெண்கள் தொண்டு நிறுவனத்தின் மூலம் மீட்கப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து சவுதி அரேபியத் தூதர், அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.ஆனால், யாரையும் இதுவரை கைது செய்யவில்லை.
ஆனால், தூதர் மீதான இக்குற்றச்சாட்டுகளைச் சவுதி அரேபிய அரசு ஏற்க மறுத்துள்ளது. இந்தக் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய்யானவை. இது தொடர்பாக இந்திய அரசு, தூதரக விதிமுறைகளின் அடிப்படையில் விளக்கம் அளிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளது.