கோலாலம்பூர் – காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டுள்ள அரசாங்க வழக்கறிஞர் கெவின் மொராய்ஸ் (படம்) கடத்தப்பட்டுள்ளார் என்பது தங்களுக்குக் கிடைத்த தானியங்கி படம் எடுக்கும் காணொளிகள் (சிசிடிவி கேமரா) மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கோலாலம்பூர் காவல்துறையின் குற்றப் புலனாய்வுப் பிரிவின் தலைவர் டத்தோ சைனுடின் அஹ்மாட் தெரிவித்துள்ளார்.
ஆனாலும், இதுவரை கடத்தல்காரர்களிடமிருந்து கெவின் மொராய்ஸ் குடும்பத்தினருக்கு பிணைப் பணம் கோரி தொலைபேசி அழைப்புகள் எதுவும் வரவில்லை என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
இதற்கிடையில், சிலாங்கூர் மாநில குற்றப் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் டத்தோ முகமட் அட்னான் அப்துல்லா கிள்ளானில் மொராய்சின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக வெளியான தகவல்களை மறுத்துள்ளார்.