கோலாலம்பூர் – தனது 16 கிரிமினல் மற்றும் சிவில் வழக்குகள் தொடர்பாக தனது வழக்கறிஞர்களுடன் கலந்து பேசி சட்டப்பூர்வ ஆலோசனைகளைப் பெற உள்துறை அமைச்சர் சாஹிட் ஹமீடி அனுமதிக்க மறுக்கிறார் என்று முன்னாள் எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் மீண்டும் ஒரு முறை குற்றம்சாட்டியுள்ளார்.
“அகமட் சாஹிட் ஹமீடியின் முடிவை எண்ணி வருந்துகிறேன். எனது வழக்கறிஞர்கள் என்னை வந்து சந்தித்து வழக்குகள் குறித்து ஆலோசனைகளை பெறுவதை அவர் தடுக்கிறார்.”
“இந்த முடிவு சட்டப்பூர்வ ஆலோசனைகள் பெறும் எனது உரிமைக்கு எதிரானது மற்றும் எனது வழக்கறிஞர்கள் தங்களது கடமைகளை செய்வதற்குத் தடையாக உள்ளது” என்று அன்வார் இன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
உதாரணமாக, எதிர்வரும் செப்டம்பர் 15 மற்றும் அக்டோபர் 5 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள தனது வழக்குகள் தொடர்பில், இன்று தன்னுடன் கலந்தாலோசிக்க வந்த தனது வழக்கறிஞர்கள் என்.சுரேந்திரன் மற்றும் அம்பிகா ஸ்ரீனிவாசன் ஆகிய இருவருக்கும் அனுமதி மறுக்கப்பட்டது என்றும் அன்வார் தெரிவித்துள்ளார்.