சிங்கப்பூர் – (இன்று சிங்கையில் நடைபெறும் பொதுத் தேர்தலின் முக்கிய அம்சங்கள், தேர்தல் முடிவுகள் எப்படி அமையலாம் என்பது குறித்து செல்லியல் நிர்வாக ஆசிரியர் இரா.முத்தரசன் பார்வையில் ஒரு கண்ணோட்டம்)
உலகிலேயே மற்ற நாட்டு மக்கள் அக்கறை காட்டாத – “ஒரே போரடிப்பு” என ஒதுக்கும் – ஒரு நாட்டின் பொதுத் தேர்தல் எதுவென்று கேட்டால் தயங்காமல் எல்லோரும் “சிங்கப்பூர்தான்” என அடித்துக் கூறுவார்கள்.
அந்த அளவுக்கு 1965ஆம் ஆண்டில் தனி நாடாகப் பிரகடனப்படுத்தப்பட்ட பின்னர் ஒவ்வொரு பொதுத் தேர்தலிலும் ஆளும் பிஏபி கட்சி மட்டுமே எல்லாத் தொகுதிகளிலும் வென்று வந்தது. எனவே, யாருமே, உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அவ்வளவாக சிங்கப்பூர் பொதுத் தேர்தல் குறித்து அக்கறைப்பட மாட்டார்கள்.
ஆனால், இன்றைய நிலைமை வேறு! உலகமே எதிர்பார்க்கத் தொடங்கி விட்டது சிங்கப்பூர் தேர்தல் முடிவுகளை!
1981ஆம் ஆண்டில் முதன் முறையாக பல ஆண்டுகாலப் போராட்டத்திற்குப் பின்னர் முதல் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினராக, தொழிலாளர் கட்சியின் சார்பாகப் போட்டியிட்டு வெற்றி பெற்று, சாதனை படைத்தார் ஜே.பி.ஜெயரத்தினம்.
ஆனால், அந்த வெற்றிக்கு முன்னரும், அதற்குப் பிறகும் அவர் சிங்கை அரசியலில் சந்தித்த போராட்டங்கள், அவருக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்குகள் என்ற பெயரில் அவருக்கு ஏற்படுத்தப்பட்ட நெருக்குதல்கள், லீ குவான் இயூவோடு அவர் நடத்திய நாடாளுமன்ற விவாதங்கள், அவர் திவாலாக்கப்பட்டது, அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டது எல்லாம் தனிக்கதை.
2008ஆம் ஆண்டில் காலமான ஜெயரத்தினம்தான் (படம்), இன்றைக்கு சிங்கை மக்கள் கூடுதல் ஜனநாயகத்தை சுவாசிக்கவும், அரசியல் மாற்றங்கள் குறித்து துணிந்து பகிரங்கமாக விவாதிக்கவும் வித்திட்டவர்.
அவருக்குப் பின்னர் ஓரிருவர் எதிர்க்கட்சிகளின் மூலம் வென்று நாடாளுமன்ற உறுப்பினர்களாக வர முடிந்தது என்றாலும், எதிர்க்கட்சிகள் அதிக அளவில் பிஏபி கட்சியின் ஆதிக்கத்தை உடைத்ததும், அதிக அளவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சிகளின் வழி வென்றதும் 2011இல் தான்.
பல வகைகளிலும் முக்கியத்துவம் வாய்ந்த 2015 தேர்தல்
இன்று நடைபெறும் பொதுத் தேர்தல் பல சிறப்புக்களைக் கொண்டது.
முதலாவதாக, சிங்கப்பூரின் தந்தையாகப் போற்றப்படும் லீ குவான் இயூ களத்தில் இல்லாத முதல் தேர்தல்.
அவரது மகனும், நடப்பு பிரதமருமான லீ சியன் லுங் பிஏபி கட்சியை தனித்து நின்று தலைமையேற்று தனது தந்தையின் நிழல் படாமல் சந்திக்கும் முதல் தேர்தல்.
சிங்கப்பூரின் தந்தை லீ குவான் இயூவின் பிரம்மாண்ட உருவப் பின்னணியில் – இந்த ஆண்டு கோலாகலமாகக் கொண்டாடப்பட்ட தேசிய தினப் பொன்விழா…
2011இல் தங்களுக்குக் கிடைத்த ஆதரவு – வெற்றிகளைத் தொடர்ந்து, ஒவ்வொரு தொகுதியிலும் பிஏபி கட்சிக்கு நேருக்கு நேர் மோதலை எதிர்க்கட்சிகள் வெற்றிகரமாக உருவாக்கியுள்ள தேர்தல் இது.
இணையம், பேஸ்புக், வாட்ஸ்எப் என நவீன தகவல் தொடர்பு ஊடகங்கள் ஆதிக்கம் செலுத்தும் இன்றைய காலகட்டத்தில் சிங்கப்பூரின் இளைய சமுதாயத்தினர் அவற்றின் துணை கொண்டு அரசியல் மாற்றங்களை ஏற்படுத்துவார்களா என்ற எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கும் முதல் பொதுத் தேர்தல் இது.
பிஏபி கட்சியின் சாதகங்கள்
சில வகைகளில் பிஏபி கட்சி வலுவான சில சாதகங்களை இந்தத் தேர்தலில் கொண்டிருக்கின்றது என்பதையும் மறுப்பதற்கில்லை.
முதலாவது லீ குவான் இயூவின் மறைவினால் ஏற்பட்டிருக்கும் அனுதாப அலை, மக்களின் மனங்களில் இன்னும் ஈரம் காயாமல் இருக்கும் போதே பொதுத் தேர்தலை அவர்கள் அறிவித்துள்ளது அவர்களுக்குச் சாதகமான அரசியல் வியூகம்.
இதன் காரணமாக, சிங்கையின் மூத்த வாக்காளர்கள் பலர் – கடந்த தலைமுறைகளில் லீ குவான் இயூவின் பாதிப்பைக் கொண்டவர்கள் மத்தியில் – மீண்டும் பிஏபியின் கரங்களிலேயே சிங்கையின் ஆட்சி ஒப்படைக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியிருக்கின்றது.
சிங்கப்பூருக்காக, இந்த நாட்டை இன்றைய உயரிய நிலைக்குக் கொண்டுவர லீ குவான் இயூ நடத்திய போராட்டங்கள், செய்த தியாகங்கள் எல்லாம் இன்று சிங்கையின் மூத்த குடியினர் தங்களின் கரங்களில் வாக்குச்சீட்டை ஏந்தும் போது அவர்களின் கண்முன்னே வரிசை கட்டி வந்து நிற்கும்.
சிங்கப்பூர் தேசிய தினக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியான இராணுவ அணிவகுப்பு..
இரண்டாவதாக, ஆகஸ்ட் 9ஆம் தேதி கொண்டாடப்பட்ட சிங்கப்பூரின் தேசிய தினத்தை முன்னிட்டு நடந்து முடிந்த கோலாகல பொன்விழா கொண்டாட்டங்களின் தாக்கம், அதன் காரணமாக சிங்கையின் கடந்த கால சாதனைகளை மக்கள் மனங்களில் பதிய வைத்திருப்பது – அந்த நினைவுகள் விலகிப் போவதற்கு முன்னாலேயே பொதுத் தேர்தலை நடத்துவது போன்றவை பிஏபி கட்சியின் மற்றொரு சாதக அம்சம்.
சிங்கப்பூரில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட தொகுதி எல்லைப் பங்கீடுகள் ஆளும் கட்சியான பிஏபிக்கு சாதகமான முறையில் மாற்றியமைக்கப்பட்டிருக்கின்றன என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. இந்த அம்சமும் பிஏபிக்கு சாதகமாக முடியலாம்.
பிஏபிக்கு எதிர்மறையான அம்சங்கள்
ஆனந்தமாக வான வெளிகளில் பறந்து திரிந்து சுதந்திரக் காற்றை அனுபவிக்க வேண்டிய அழகான கிளியைக் கூண்டில் அடைத்து – அதற்கு வேண்டிய உணவு, தண்ணீர் வைத்துவிட்டு – “உனக்குத்தான் எல்லாம் இருக்கிறதே, ஏன் கவலைப்படுகின்றாய்” எனக் கேட்கும் கதைதான் சிங்கப்பூர் மக்களின் நிலைமை.
மலேசியர்கள்கூட இங்கு சுதந்திரமாக ஜனநாயகப் போராட்டம் நடத்துவதற்கான சூழ்நிலை இருக்கின்றது. ஆனால், சிங்கப்பூரிலோ ஜனநாயகம் பல்வேறு கட்டுப்பாடுகளால் முடக்கி வைக்கப்பட்டிருப்பது குறித்து விரிவான விளக்கங்கள் தேவையில்லை.
பொதுத் தேர்தல் பிரச்சாரம் ஒன்றின்போது எதிர்க்கட்சிகளின் பிரச்சாரத்தைக் கேட்க கூடிய திரளான மக்கள் – எல்லாம் வாக்குகளாக மாறுமா?
இந்நிலையில் இன்று சிங்கப்பூரின் கடந்த கால சாதனைகள், வளர்ச்சிகள் குறித்த பெருமிதத்திலேயே காலந்தள்ள வேண்டுமா?
அல்லது ஜனநாயகமும் சுதந்திரமும் கொண்ட ஒரு சூழ்நிலையை உருவாக்க – அரசாங்கத்திற்கு எதிராக, மக்களின் தேவைகளைத் தட்டிக் கேட்கின்ற வலுவான எதிர்க்கட்சிகளைக் கொண்ட ஓர் அரசியல் களத்தை உருவாக்க வேண்டுமா?
என்பதுதான் சிங்கப்பூர் மக்களுக்கு இந்த தேர்தலில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான கேள்வி.
லீ குவான் இயூ சாதனைகளை மட்டுமே கூறிக் கொண்டு, அவரது மகன் என்ற காரணத்தால் அந்தப் பலன்களை அவரது மகள் லீ சியன் லுங் அறுவடை செய்ய நினைப்பது நியாயமா? மற்றவர்களுக்கும் வாய்ப்பளிக்க வேண்டாமா? என மக்கள் நினைக்கவும், பேசவும் தொடங்கியிருப்பது எதிர்க்கட்சிகளுக்குக் கிடைத்திருக்கும் நல்லதொரு சாதகமான மாற்றம்.
இன்றைய தேர்தல் முடிவுகள் எப்படியிருக்கும்?
பிஏபி கட்சி தோல்வி அடைந்துவிடுமோ என்ற எண்ணமோ, சந்தேகமோ சிங்கப்பூரில் யாருக்கும் இல்லை. பெரும்பான்மையான மக்களின் தேர்வாக இன்னும் இருப்பது பிஏபிதான்.
லீ குவான் இயூவின் இறுதி ஊர்வலம் – அவரது நினைவுகள் பிஏபிக்கு சாதகமான வாக்குகளாக மாறுமா?
2011இல் மொத்தமுள்ள 87 தொகுதிகளில் 6 தொகுதிகளை வென்ற எதிர்க்கட்சிகள் இந்த முறை எத்தனை தொகுதிகளை வெல்ல முடியும், எத்தனை சதவீத மக்கள் ஆதரவைப் பெற முடியும் என்பதுதான் மக்கள் இன்றைக்கு எதிர்பார்த்துக் காத்திருக்கும் கேள்விகள்!
இந்தத் தேர்தலில் 2.5 மில்லியன் சிங்கப்பூர் வாக்காளர்கள் வாக்களிக்க இருக்கின்றனர்.
50 ஆண்டுகால சரித்திரத்தில், கடந்த பொதுத் தேர்தலில்தான் ஆகக் குறைந்த அளவில், 60.1 சதவீத வாக்காளர் ஆதரவை மட்டுமே பெற்ற பிஏபி கட்சி இந்தத் தேர்தலில் அதை உயர்த்திக் காட்ட முடியுமா?
கடந்தமுறை லீ குவான் இயூ இருந்தும் வாக்குகள் இவ்வளவு குறைந்த நிலையில் அவரது மகனால், இப்போது தனித்து நின்று, பெருகி வரும் மக்களின் ஜனநாயக மாற்ற விருப்ப அலைகளுக்கு எதிராக வென்று காட்ட முடியுமா?
இன்று இரவு சிங்கப்பூரின் தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும்போது, பிஏபிக்கு ஆதரவான மக்கள் ஆதரவு சதவீதம் மேலும் கணிசமாகக் குறையும் –
குறைந்தது பத்து அல்லது பதினைந்து தொகுதிகளை வென்று எதிர்க்கட்சிகளின் பலம் சற்றே நாடாளுமன்றத்தில் கூடும் –
என்பதுதான் பரவலான அரசியல் பார்வையாளர்களின் கணிப்பாக இருக்கின்றது.
-இரா.முத்தரசன்