சனா – ஏமன் அரசுக்கு எதிராக நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரில், அந்நாட்டு அரசுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் சவூதி அரேபியா, தனது கூட்டுப் படையைக் கொண்டு போராளிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகிறது. சமீபத்தில், ஹூடியா துறைமுகம் அருகே எரிபொருள் கடத்தல் கும்பலைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் அந்த பகுதியில் வசித்து வந்த அப்பாவி இந்தியர்களும் பாதிக்கப்பட்டனர்.
இந்த சம்பவத்தில், 20 பேர் பலியானதாக ஆரம்பத்தில் கூறப்பட்டாலும், அவர்களில் 13 பேரை ஏமன் அரசு உயிருடன் மீட்டது. மீதி 7 பேரின் நிலை என்னவானது என தெரியாமல் இருந்து வந்த நிலையில், அவர்களில் 6 பேரின் உடல்கள் இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வந்துள்ளன. ஒருவர் என்ன ஆனார்? என்பது இதுவரை தெரியவில்லை. இதனை இந்திய வெளியுறவு அமைச்சகமும் உறுதி செய்துள்ளது.
இதற்கிடையே, ஏமனில் இந்திய தூதரகம் பல்வேறு காரணங்களுக்காக கடந்த ஏப்ரல் மாதம் மூடப்பட்டதால், பலியானவர்களின் உடல்களை மீட்டு வருவதிலும், பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றுவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.