கோலாலம்பூர் – மெக்காவில் நேற்று மாலை ஏற்பட்ட கட்டுமான பளுதூக்கி (கிரேன்) விபத்தில் காயமடைந்தவர்களில் 6 மலேசியர்களும் உள்ளனர் என்ற தகவல் வெளிவந்துள்ளது.
இது குறித்து மலேசிய மெக்கா புனித யாத்திரை பேராளர்களின் தலைவர் டத்தோ சையத் சாலே சையத் அப்துல் ரஹ்மான் கூறுகையில், “மெக்காவில் நேற்று மாலை 5 மணிக்கு (மலேசிய நேரம் இரவு 10 மணியளவில்) அங்கு கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த கிரேன் ஒன்று சரிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் மலேசியர் ஒருவருக்கு காலில் முறிவும், 5 மலேசியர்களுக்கு லேசான காயங்களும் ஏற்பட்டுள்ளன” என்று தெரிவித்துள்ளார்.
மெக்காவிலுள்ள மஸ்ஜித் அல்-ஹராம் என்ற மசூதியில், நேற்று கட்டிட வேலைப்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக இராட்சத கிரேன் இயந்திரம் விழுந்ததில் 107 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், இந்த சம்பவத்தில், 238 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளன.