Home கலை உலகம் ரணகளமான நடிகர் சங்கத் தேர்தல்: வெல்லப் போவது யார்?

ரணகளமான நடிகர் சங்கத் தேர்தல்: வெல்லப் போவது யார்?

852
0
SHARE
Ad

AVSG101112சென்னை – நடிகர் சங்கத்தில் ரணகளமாய்த் தொடங்கிய பிரச்சினை, இப்போது அனல் பறக்கும் தேர்தல் களத்தில் வந்து சடுகுடு ஆட ஆரம்பித்திருக்கிறது. நடிகர் சங்கத்திற்குள் ஏனிந்தப் பிரச்சினை? பிரச்சினை வரக் காரணம் என்ன? பிரச்சினையின் நீட்சியாய்த் தொடரும் தேர்தலில் வெல்லப் போவது யார்? என்பது குறித்துச் சுருக்கமாய் ஓர் அலசல்.

பிரச்சினையின் மூலாதாரம் ராதாரவி:

பொறுப்புள்ள தாத்தன் முப்பாட்டன் சேர்த்து வைத்த சொத்தையெல்லாம், ஊதாரிப் பேரன் வந்து அழிப்பது போல்- நல்ல வாயன் சம்பாதித்ததை நார வாயன் தின்பதுபோல், சிவாஜிகணேசன், எஸ்.எஸ்.ராஜேந்திரன் போன்றோர் தலைமைப் பொறுப்பில் இருந்து கட்டிக் காப்பாற்றிய நடிகர் சங்கத்தை ராதாரவி தலைவராக வந்து சீர்குலைத்தார் என்பது பரவலாக அவர் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு.

#TamilSchoolmychoice

ratha raviதற்போது நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளராக உள்ள ராதாரவி, சுமார் 13 ஆண்டுகளுக்கு முன் நடிகர் சங்கத்திற்குத் தலைவராக இருந்தார். அந்தக் காலகட்டத்தில் நிர்வாகக் குளறுபடிகளால் நடிகர் சங்கத்தின் மேல் பல கோடி ரூபாய்க் கடன் வந்து சேர்ந்தது.

இந்த இக்கட்டான கட்டத்தில் சிக்கி நடிகர் சங்கம் திக்குமுக்காடிக் கொண்டிருந்த போது, ஆபத்பாந்தவனாகத் தலைமைப் பொறுப்பிற்கு வந்தார் விஜயகாந்த்.

நடிகர் சங்கத் தலைவராக விஜயகாந்த்:

அரசியல் கட்சித் தலைவராகத் தான் அவர் பல சொதப்பல்களுக்குச் சொந்தக்காரர் ஆகிறார். ஆனால், நடிகர் சங்கத்தின் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்ட போது அகிலமே ஆச்சரியப்படும் வகையில் மிகவும் பொறுப்பாகச் செயல்பட்டார்.

மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் நடிகர்களைக் கொண்டு கலைநிகழ்ச்சிகள் நடத்தி நிதி திரட்டி, நடிகர் சங்கத்தின் மீதிருந்த பல கோடிக் கடனைச் சில நாட்களிலேயே அடைத்தார் விஜயகாந்த்.

IMG_0684இதனால் நடிகர்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். கேப்டன் என்ற சொல்லுக்கு ஏற்றபடி சங்கத்தைத் திறம்பட நடத்திச் சென்று நடிகர்கள் மத்தியில் நல்ல பெயர் வாங்கினார்.

அதற்குள், பாலம் அமைப்பதற்காகக் கோயம்பேடு கல்யாண மண்டபத்தை இடிக்கும் பிரச்சினையில் கருணாநிதியோடு முட்டிக் கொண்டு தேமுதிக கட்சி ஆரம்பித்தார்.

கட்சித் தலைவரான பிறகு அவரே முன் வந்து நடிகர் சங்கத் தலைவர் பதவியிலிருந்து விலகினார். அண்ணன் எப்போது போவான்? திண்ணை எப்போது காலியாகும் என்று தம்பி காத்திருந்தது போல், விஜயகாந்த் போனதும் சரத்குமார் அந்தப் பதவிக்கு வந்தார்.

மீண்டும் ராதாரவி தலையெடுப்பு – பிரச்சினை பூதாகாரம்:

விஜயகாந்த் தலைவராக இருந்த போது காணாமல் போயிருந்த- அடக்கி வாசித்துக் கொண்டிருந்த ராதாரவி, தனது மைத்துனர் சரத்குமார் வந்ததும் மீண்டும் தலையெடுக்கத் தொடங்கினார். நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளர் பொறுப்பைக் கைப்பற்றினார்.

Radha-raviஅதற்கப்புறம் அவர்களின் ராஜ்ஜியம் தான். பிரசித்தி பெற்ற நடிகர் சங்கக் கட்டிடத்தை இடித்துத் தரைமட்டமாக்கி விட்டு, அந்த இடத்தில் வணிக வளாகம் கட்ட தனியார் நிறுவனத்தோடு ஒப்பந்தம் போட்டார்கள்.

எந்தத் தீர்மானம் நிறைவேற்றினாலும், பொதுக் குழுவையும் செயற்குழுவையும் கூட்டி விவாதித்து உறுப்பினர்கள் அனைவரின் ஒப்புதல் பெற்ற பிறகே நிறைவேற்ற வேண்டும் என்பது விதி. ஆனால், அந்த விதியை மதிக்காமல் தன்னிச்சையாக முடிவெடுத்துத் தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு, பொதுக் குழுவிற்கும் செயற்குழுவிற்கும் தெரிவித்திருக்கிறார்கள்.

எவரிடமும் விவாதிக்காமல் 500 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தைத் தனியாருக்குத் தாரை வார்த்தால் கேள்வி கேட்காமல் இருப்பார்களா? வெளிப்படையாக இல்லாமல் இரகசியமாக இந்த ஒப்பந்தம் போடப்பட்டதால் “இதில் ஊழல் நடந்திருக்கிறது; தனியாருக்கு நிலத்தைத் தாரை வார்ப்பதை அனுமதிக்க மாட்டோம்; கட்டிடம் கட்டுவதானால் நடிகர் சங்கப் பணத்தில் தான் கட்ட வேண்டும்” என்று விஷால், நாசர், கார்த்தி முதலானவர்கள் போர்க் கொடி தூக்கினார்கள்.

vishal_2445523fஅங்கே பிரச்சினை ஆரம்பித்தது.சரியான காரணங்கள் சொல்லாமல், கேள்வி கேட்டவர்களை எல்லாம் ராதாரவி ஏகவசனத்தில் பேசினார். இதனால் சரத்குமார், ராதாரவிக்கு எதிராக விஷால் தலைமையில் ஓர் அணி உருவானது.

நீதிமன்றத்தை நாடிய குமரிமுத்து, பூச்சி முருகன்:

பல ஆண்டுகளாகக் கம்பீரமாக நின்ற நடிகர் சங்கக் கட்டிடம் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டதைப் பொறுக்க முடியாமல், நடிகர் குமரிமுத்து தைரியமாகத் தட்டிக் கேட்டார். உடனே அவரை அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து தூக்கினார்கள்.

அதை எதிர்த்து அவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துத் தன்னுடைய ஆயுட்கால உறுப்பினர் உரிமையை மீண்டும் பெற்றார்.

“காலங்காலமா கட்டிக் காப்பாத்தி வந்த கட்டிடத்த இப்படி இடித்துத் தரைமட்டமாக்கிட்டீங்களே…இது நியாயமா?ன்னு கேட்டது குத்தமாமா? அதுக்குப் போயி என்னெ நடிகர் சங்கத்துல இருந்தே நீக்கிட்டாங்க. சரத்குமாரும் ராதாரவியும் சேர்ந்து சர்வாதிகாரம் பண்றாங்க. புதுசா வந்திருக்கிற இளைஞர்களுக்கு வழி விட்டு  அவங்க ரெண்டு பேரும் விலகிக் கொள்வதுதான் நல்லது” என்கிறார் குமரிமுத்து.

NTLRG_150616152956000000

(நடிகர் குமரிமுத்து)

“பரந்து விரிந்த நடிகர் சங்க நிலத்தைத் தனியாருக்கு 29 வருஷம் 11 மாசம் லீசுக்கு விட்டுட்டாங்க. அத்தனை வருஷத்திற்கு லீசுக்கு விட்ட சொத்து திரும்பக் கிடைக்குமா? கேட்டா, 4000 சதுர அடியில நடிகர் சங்கத்துக்கு ஆபிஸ் வரும் என்கிறார் ராதாரவி.ஆனா, பத்திரத்துல அப்படி ஒரு குறிப்பே இல்ல. அதனால தான் நான் கோர்ட்டுக்குப் போனேன். ஊழல் நடந்திருக்க வாய்ப்பிருக்குன்னு நீதிபதிகள் தீர்ப்பு சொல்லியிருக்காங்க” என்கிறார் பூச்சி முருகன்.

இவர்தான் இந்தப் பிரச்சினையை முதன்முதலில் வெளிக் கொண்டு வந்த சாதாரண துணை நடிகர்.

201509130126378342_My-life-is-in-danger-the-police-commissioners-office-the_SECVPF

(நடிகர் பூச்சி முருகன்)

நடிகர் சங்கத் தேர்தல் அறிவிப்பும் ரத்தும்:

இந்தப் பிரச்சினைகளுக்கு இடையே நடிகர் சங்கத் தேர்தலை அறிவித்தார்கள் சரத்குமாரும் ராதாரவியும். அதிலும் யாரிடமும் கலந்து பேசாமல் இருவரும் தன்னிச்சையாக முடிவெடுத்து விட்டதாக மீண்டும் பிரச்சினை எழுந்தது.

வழக்கமாகச் சினிமா தொடர்பான தேர்தல்கள் ஞாயிற்றுக்கிழமையில் தான் நடக்கும். அன்று தான் படப்பிடிப்புகள் ஏதும் நடக்காது. உறுப்பினர்களும் தவறாமல் வந்து வாக்களிக்க வசதியாக இருக்கும்.

அப்படி இல்லாமல் வழக்கத்திற்கு மாறாகத் தேர்தலைப் புதன்கிழமை வைத்ததால், அந்தத் தேர்தலை ரத்து செய்து ஞாயிற்றுக் கிழமையில் தேர்தல் வைக்க உத்தரவிடக் கோரி விஷால் தரப்பினர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர்.

ஊடகங்களில் யுத்தம்- சந்திரசேகர் விலகல்:

அதைத் தொடர்ந்து இரு தரப்பினருக்குமிடையே பகை முற்றி, பத்திரிக்கைகளிலும் தொலைக்காட்சிகளிலும் ஒருவரை மாற்றி ஒருவர் குறை கூறி, எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றிக் கொண்டார்கள்.

இரு தரப்பினருக்கும் இடையில் நடந்த மோதலால் மனம் வெறுத்து, அதுவரை சரத்குமாருக்கு ஆதரவாக இருந்த நடிகர் சங்கப் பொருளாளர் வாகை.சந்திரசேகர் தனது பொறுப்பிலிருந்து திடீரென விலகிக் கொண்டார்.

ஊழல் புகார் கூறப்பட்டுப் பிரச்சினை வெடித்திருக்கும் சூழ்நிலையில் நீங்கள் பதவியிலிருந்து விலகக் காரணம் என்ன எனக் கேட்டதற்குச் சந்திரசேகர், “நடிகர் சங்கப் பிரச்சினைக்குள் தலைவர் கலைஞரைச் சரத்குமார் தேவையில்லாமல் விமர்சிப்பது பிடிக்காமல் விலகி விட்டேன். மற்றபடி ஊழல் நடந்திருப்பதாகச் சொல்வதில் உண்மையில்லை” என்றார்.

10-1433933089-vagai-chandrasekar-2-600இந்நிலையில், நடிகர் சங்கத் தேர்தலில் சரத்குமார்-ராதாரவி அணிக்கு எதிராக நிற்கப் போவதாக விஷால் அணியினர் அறிவிக்க, பிரச்சினை இன்னும் பற்றிக் கொண்டு எரிய ஆரம்பித்தது.

தேர்தலில் தனக்கு எதிராக யாரும் போட்டியிட மாட்டார்கள்; போட்டியின்றி மீண்டும் தலைவராகவும் பொதுச் செயலாளராகவும் தேர்வாகிவிடலாம் என மனப்பால் குடித்துக் கொண்டிருந்த சரத்குமார்- ராதாரவிக்கு இது பெரும் அதிர்ச்சியாகவும் ஏமாற்றமாகவும் இருந்தது.

“15 வருஷமா உங்கள நம்பினோம்; அதெல்லாம் பெருசா தெரியல. கேள்வி கேட்டா மட்டும் தப்பா தெரியுதா? எங்களப் பொருத்தவரையில பதவி, சண்டையெல்லாம் வேண்டாம். தனியாரிடம் போட்டுள்ள ஒப்பந்தத்த ரத்து செய்துட்டு வரட்டும். உட்கார்ந்து பேசி ஒரு முடிவெடுப்போம். நீங்களே பதவியில இருங்க.ஆனா, கட்டடம் நடிகர்களோட காசுல தான் கட்டணும். தனியார் யாரும் உள்ள வரக் கூடாது. அப்படி இல்லன்னா நாங்க தேர்தல்ல நிக்கிறது உறுதி” என்றார் நாசர்.

08-1433749720-actor-nassar-600ஆனால், சரத்குமாரும் ராதாரவியும் தனியார் ஒப்பந்தத்தை ரத்து செய்யத் தயாராக இல்லை.

இதற்கிடையில், சென்னை உயர்நீதிமன்றம் விஷால் அணியினரின் கோரிக்கையை ஏற்று நடிகர் சங்கத் தேர்தலை ரத்து செய்தது. இது விஷால் அணியினருக்குக் கிடைத்த முதல் வெற்றி.

இதை எதிர்த்து ராதாரவி மேல்முறையீடு செய்தார்; அம்மேல்முறையீட்டு மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்ததோடு, நடிகர் சங்கத் தேர்தலை முன்னின்று நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபனைத் தேர்தல் பொறுப்பாளராக நியமித்தது. இது சரத்குமார்-ராதாரவி அணிக்கு விழுந்த முதல் அடி!

ஆதரவு வேட்டையும் நாடக நடிகர் சங்கத் தேர்தலும்:

நடிகர் சங்கத் தேர்தலில் இம்முறை பலத்த போட்டி உறுதி என்றானதும், முதல் கட்டமாக இரு அணியினரும் மாவட்டம் தோறும் சென்று நாடக நடிகர்களைச் சந்தித்து ஆதரவு திரட்டத் தொடங்கினர்.

நாடக நடிகர் சங்கங்களும் நடிகர் சங்கத்துடன் இணைந்தது என்பதோடு அதில் அதிகமான எண்ணிக்கையில் உறுப்பினர்கள் இருப்பதால், தேர்தலில் வெற்றி பெறுவதற்கு அவர்களின் ஆதரவு ரொம்ப ரொம்ப முக்கியம். ஆகையால், ராதாரவியும் விஷாலும் நாடக நடிகர்களைச் சந்தித்துச் சலுகைகளை அள்ளி இறைத்தனர்.

நாடக நடிகர் சரத்குமார் அணி, விஷால் அணி என இரண்டு அணியாகப் பிரிந்து மோதிக் கொண்டனர்.

இந்நிலையில் சேலம் மாவட்ட நாடக நடிகர் சங்கத் தேர்தல் நடைபெற்றது. அதில் சரத்குமார் அணியினர் வெற்றி பெற்றனர்; விஷால் அணியினர் தோல்வியைத் தழுவினர். இந்த வெற்றி நடிகர் சங்கத் தேர்தலிலும் பிரதிபலிக்கும் என்றும், அதனால் சரத்குமார் அணியினரே வெற்றி பெறுவார்கள் என்றும் ஆருடம் சொல்லப்பட்டது.

ஆனாலும் மனம் தளராமல் விஷால் அணியினர், “இது வெறும் சைடு பிக்சர் தான்; மெயின் பிக்சர் சென்னையில இருக்கு.அதுல நாங்க கெத்து காண்பிப்போம்” என்று சவால் விட்டார்கள்.

அடுத்த கட்டமாக விஷால் அணியினர் உச்ச நட்சத்திரமான ரஜினிகாந்தையும் கமல்ஹாசனையும் சந்தித்து ஆதரவு கேட்டனர். அவர்களைத் தொடர்ந்து சரத்குமாரும் ரஜினிகாந்தை அவரது போயஸ் தோட்ட வீட்டிற்குச் சென்று சந்தித்துப் பேசினார்.

17-1439804043-vishal-met-rajiniஅதற்கடுத்து விஷால் அணியினர் விஜயகாந்தை அவரது கட்சி அலுவலகத்தில் சென்று சந்தித்து ஆதரவு கேட்டனர். “எனது ஆதரவு எப்போதும் உங்களுக்குத் தான்” என விஜயகாந்த் உறுதியளித்திருப்பதாக விஷால் அணியினர் பேட்டியளித்தார்கள்.

தற்போதைய நிலவரப்படி விஷால் அணியினருக்குக் குஷ்பு,சிவகுமார்,விவேக், மனோபாலா,கர்ணாஸ், பொன்வண்ணன் போன்றோரெல்லாம் வெளிப்படையாக ஆதரவு தெரிவித்துள்ளனர். அவர்கள் மட்டுமன்றி விஷால் அணிக்கு ஆதரவாக கார்த்தி, ஜீவா போன்ற இளைஞர் பட்டாளமே அணி திரண்டு நிற்கிறது.

சரத்குமார் அணிக்குச் சிம்பு, எஸ்.ஜே.சூர்யா, விஜயகுமார்,நளினி,குயிலி போன்ற ஒரு சிலர் தான் வெளிப்படையாக ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள்.

இவர்கள் தவிர மற்ற நடிகர்- நடிகைகளின் எண்ணம் என்ன என வெளிப்படையாகத் தெரியவில்லை.துணை நடிகர்கள் யாருக்கு அதிகம் ஆதரவளிக்கப் போகிறார்கள் என்பதும் பூடகமாகவே உள்ளது.

வாக்காளர் பட்டியல் குளறுபடி:

நடிகர் சங்கத் தேர்தல் தொடர்பான வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும் என்று விஷால் அணியினர் போராடி வெளியிட வைத்தனர். ஆனால், சரத்குமார் வெளியிட்ட அந்த வாக்காளர் பட்டியலில் பயங்கரக் குளறுபடி உள்ளதாகவும், சரத்குமாரும் ராதாரவியும் அவர்களுக்கு வேண்டப்பட்ட யார் யாரையோ நடிகர் சங்க உறுப்பினராகச் சேர்த்து அவர்கள் பக்கம் ஆள் சேர்த்திருப்பதாகவும், நீண்ட கால உறுப்பினராகிய கலைஞர் கருணாநிதியையே வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கி அவரது ஓட்டுரிமையைப் பறித்து விட்டதாகவும் விஷால் குற்றம்சாட்டினார்.

karunanithiஅதற்கு ராதாரவி, ” எங்க வீட்டுல டிரைவரா இருக்கிறவன், சர்வண்டா இருக்கிறவன் எல்லாம் படத்துல நடிச்சிருக்கான்.அதனால நடிகர் சங்கத்துல உறுப்பினர் கார்டு வாங்கியிருக்கான்.நடிகர்கள்ல சின்ன நடிகர் பெரிய நடிகர் என்கிற பேதமெல்லாம் கிடையாது.அப்புறம்…கருணாநிதி கெளரவ உறுப்பினர் தான்.கெளரவ உறுப்பினருக்கெல்லாம் ஓட்டுரிமை கிடையாது.சும்மா விவரம் தெரியாம எதையாவது பேசி வைக்கக் கூடாது” என்று காட்டமாகப் பதிலளித்திருக்கிறார்.

நடிகர் சங்கத் தேர்தல் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு:

இப்படிப்பட்ட சூழ்நிலையில், தேர்தல் பொறுப்பாளர் நீதிபதி பத்மநாபன் இரு தரப்பினரையும் கலந்து ஆலோசித்து, அக்டோபர் மாதம் 18-ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை காலை 7 மணி முதல் 5 மணி வரை மயிலாப்பூர் செயிண்ட் எப்பாஸ் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் என்று அறிவித்தார்.

சரத்குமார் அணியில் மீண்டும் தலைவர் பதவிக்குச் சரத்குமாரும், பொதுச் செயலாளர் பதவிக்கு ராதாரவியும் போட்டியிடுகின்றனர். பொருளாளர் பதவிக்குச் சிம்புவை அறிவிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.துணைத்தலைவர் பதவிக்கு விஜயகுமார் போட்டியிடுகிறார்.

விஷால் அணியில் நாசர் தலைவர் பதவிக்கும், விஷால் பொதுச் செயலாளர் பதவிக்கும், பொன்வண்ணன் அல்லது கருணாஸ் பொருளாளர் பதவிக்கும் போட்டியிட உள்ளனர். கார்த்தி துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடுகிறார்.

சரத்குமார் சூளுரை:

தேர்தல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், தேர்தலை நிறுத்த சரத்குமார் அணியினர் முயற்சிப்பதாக விஷால் அணி குற்றம்சாட்டியுள்ளது.

இதற்குச் சரத்குமார், “நாங்கள் வெற்றி பெறுவது நூறு சதவீதம் உறுதியாகிவிட்டதால், தேர்தலை நாங்கள் நிறுத்த முயற்சிப்பதாகப் பொய்ப் பிரசாரம் செய்யத் தொடங்கியிருக்கிறார்கள் விஷால் அணியினர். தேர்தலில் வெற்றி பெறப்போகும் எங்களுக்கு எந்தப் பயமும் கிடையாது.தேர்தலை இனிமேல் யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.

இந்தத் தேர்தலைத் தள்ளிப்போட்டு நடத்தவிடாமல் செய்ய நினைத்தவர்களுக்கும், ஜனநாயக முறையில் தேர்தலைக் காலம் தவறாமல் நடத்தவேண்டும் என்று அரும்பாடுபட்ட எங்களுக்கும் நடக்கும் தர்ம யுத்தம் இது; நீதியை நிலை நாட்ட எங்களுக்குக் கிடைத்த பெரும் வாய்ப்பு இது” என்று சூளுரைத்துள்ளார்.

02-sarath2343-600-jpgதேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்தவுடன், இரு அணியினரும் மீண்டும் ஆதரவு வேட்டையை ஆரம்பித்து விட்டனர். ஆச்சி மனோரமாவில் ஆரம்பித்து அடிமட்ட நடிகர் வரைக்கும் போய் ஆதரவு திரட்டத் தொடங்கி விட்டனர்.

இதனிடையே விஷால் அணியினர் தங்களது ஆதரவாளர்கள் கூட்டத்தைக் கூட்டித் தங்களது பலத்தைத் தெரிந்து கொள்ளத் திட்டமிட்டுள்ளனர். அதற்காக ரஜினிகாந்தின் ராகவேந்திரா கல்யாண மண்டபத்தைக் கேட்டு நாசர் முதலானோர் சென்ற போது, “மண்டபம் தானே தாராளமா எடுத்துக்கங்க.சிறப்பா கூட்டம் நடத்துங்க” என்று சொல்லி அனுமதி கொடுத்துவிட்டாராம் ரஜினிகாந்த்.

மண்டபத்தைக் கேட்டதும் தயங்காமல் கொடுத்துவிட்டதால் அவரது ஆதரவு வி‌ஷால் அணிக்குத் தான் என்று புளகாங்கிதம் அடைந்து போயுள்ளனர் விஷால் அணியினர்.

வெல்லப் போவது யார்?

தற்போதைய சூழ்நிலையில் சரத்குமார் அணியையோ விஷால் அணியையோ குறைத்து மதிப்பிட்டு விட முடியவில்லை. இரு அணியுமே மிகுந்த பலம் வாய்ந்ததாக உள்ளது. ஒன்றுக்கு ஒன்று பழுதில்லை. அப்படியெனில்,வெற்றி பெறப் போவது யார்?

அரசியல் கட்சித் தேர்தல் போல் கருத்துக் கணிப்பிற்கும் இங்கே இடமில்லை. ஆதலால், ‘நீயா? நானா?’ என்னும் கடுமையான போட்டி நிலவுவது என்னவோ உண்மை.

ஆனாலும், இளைஞர் கூட்டம் வரட்டும் என்று பெரும்பாலோர் விரும்புவது போல் ஒரு தோற்றம் தெரிகிறது. பத்தாண்டு கால சரத்குமார் தலைமையில் நடிகர் சங்கத்தில் பெரிய அளவில் மாற்றங்கள் ஏதும் ஏற்பட்டதற்கான சுவடுகளும் இல்லை. அதனால், மாற்றம் ஏற்பட்டால் நல்லது என்கிற மனோபாவம் பெரும்பாலோரிடையே நிலவுவதாகவும் தெரிகிறது.

அனுபவம் நிறைந்த நடிகர்கள் பெரும்பாலோர் சரத்குமார் பக்கம்; ஆர்ப்பரிக்கும் இளம் நடிகர்கள் பட்டாளம் விஷால் பக்கம். இறுதியில் வெற்றி யார் பக்கம்? அதற்கு நாம் அக்டோபர் 19-ஆம் தேதி வரை காத்திருக்க வேண்டும். காத்திருக்கலாமா?

-ஜோதிமுருகன்