ஜோகூர்பாரு – ஜோகூர் மாநிலத்தில் ஒருபோதும் இனவாதத்தை சகித்துக் கொள்ள இயலாது என அம்மாநில சுல்தான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முகநூலில் (பேஸ்புக்) பதிவிட்டுள்ள அவர், ஜோகூர்பாருவில் உள்ள அனைத்து குடிமக்களையும், அவர்கள் எந்த இனத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் பங்சா “Bangsa Johor” – ஜோகூர் இனத்தினர் என்று குறிப்பிடுவதாகக் கூறினார்.
“மலாய்க்காரர்களுக்கு சிறப்பு உரிமைகள் உள்ளன. அதேவேளையில் சீனர்கள் மற்றும் இந்தியர்களுக்கும் கூட உரிமைகள் உள்ளன. ஏனெனில் இம்மாநிலம் “பங்சா ஜோகூருக்கு” உரியது. எனவே இன துவேஷத்தை விதைப்பவர்களை என்னால் ஒருபோதும் சகித்துக் கொள்ள முடியாது,” என்று சுல்தான் தெரிவித்தார்.
ஜோகூர் மக்கள் அம்மாநிலத்தை சிங்கப்பூரைப் போல் வளர்ச்சியடைந்த பகுதியாக மாற்ற உழைக்க வேண்டுமென கேட்டுக் கொண்ட அவர், பிறருக்கு சங்கடங்களை விளைவிக்கக் கூடிய சுயநலத்துடன் கூடிய செயல்பாட்டை ஜோகூர் மக்கள் தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தினார்.
“நமது சிந்தனையோட்டத்தை மாற்றிக் கொள்ள வேண்டிய தருணம் வந்துவிட்டது. இதன் மூலம் நமது அண்டை நாட்டைப் போல் நாமும் வளர்ச்சியடைந்த பகுதியாக மாறிவிட்டோம் என பெருமையுடன் கூற முடியும். கண்ட இடங்களிலும் குப்பைகளை தூக்கி வீசாதீர்கள். ஏனெனில் அது பிறருக்கு தொந்தரவாக அமையும். அதேபோல் பொதுச்சாலைகளில் உங்களது கார்களை இடையூறு ஏற்படுத்தும் வண்ணம் நிறுத்தாதீர்கள். அதுவும் பிறருக்கு தொல்லை தரும்” என்றும் சுல்தான் அறிவறுத்தியுள்ளார்.