ரியாவ் (இந்தோனேசியா) – இந்தோனேசியாவில் ரியாவ் பகுதியில் காற்றில் ஏற்பட்டுள்ள மிக மோசமான தூய்மைக்கேடு காரணமாக அவசரநிலைப் பிரகடனம் செய்துள்ளது அந்நாட்டு அரசாங்கம்.
சுமத்ரா தீவில் பற்றி எரியும் காட்டுத்தீயை அணைக்க விமானங்களின் மூலம் தண்ணீர் குண்டுகளை வீசியும், மேகங்களில் ரசாயனங்களைத் தூவி செயற்கை மழை வரவழைக்கும் ஏற்பாடுகளும் தயார்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இந்தோனேசிய காடுகள் பற்றி எரிவதற்குக் காரணமான நிறுவனங்கள் யார் என்பதை சிங்கப்பூரிடம் பகிர்ந்து கொள்ள இந்தோனேசிய அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது.
இது குறித்து இந்தோனேசிய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் சித்தி நுர்பாயா பக்கார், சிங்கப்பூர் சுற்றுச்சூழல் மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணனிடம் கூறுகையில், அந்த நிறுவனங்கள் யார் யார் என்ற தகவல் சரிபார்க்கப்பட்டவுடன் சிங்கப்பூரிடம் பகிர்ந்து கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளதாக சிங்கப்பூரின் தேசிய சுற்றுச்சூழல் முகமை (என்இஏ) தெரிவித்துள்ளது.