கோலாலம்பூர்- சிவப்புச் சட்டைப் பேரணியின் ஏற்பாட்டாளர்களுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், 3 மில்லியன் ரிங்கிட் தொகை அளித்ததாகக் கூறப்படுவதில் உண்மை இல்லை என மலாய் அரசு சாரா இயக்கங்களின் கூட்டமைப்பு தலைவர் டத்தோ ஜமால் யுனுஸ் (படம்) தெரிவித்துள்ளார்.
அரசு சார்பற்ற மலாய் கூட்டமைப்பின் தலைவரான அவர், பொறுப்பற்ற ஒரு தரப்பினர் இத்தகைய பொய்களை பரப்பி வருவதாக அவர் கூறினார்.
“சிவப்புச் சட்டைப் பேரணிக்கும் பிரதமருக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை. பேரணியை நடத்துவதற்காக அவரிடம் இருந்தோ, அரசாங்கத்திடம் இருந்தோ எந்தவித ஒதுக்கீட்டையும் நாங்கள் பெறவில்லை,” என நேற்று வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை ஒன்றில் ஜமால் தெரிவித்துள்ளார்.
இதனிடையே பினாங்கு முதல்வர் லிம் குவான் எங்கையும் ஜமால் கிண்டலுடன் விமர்சித்துள்ளார்.
“பினாங்கு மாநிலத்தில் இத்தகைய பேரணி நடைபெறக் கூடாது என முதல்வர் லிம் குவான் கருதலாம். அதற்காக அவர் 30 மில்லியன் ரிங்கிட் தொகையைக் கூட அளிக்கக்கூடும்” என்று ஜமால் கூறினார்.
கடந்த புதன்கிழமை கோலாலம்பூரில் நடைபெற்ற செஞ்சட்டைப் பேரணியில் ஏறத்தாழ 50 ஆயிரம் பேர் பங்கேற்றதாகக் கூறப்படுகின்றது. பெர்சே 4 பேரணி மற்றும் ஜசெகவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அந்தப் பேரணி நடைபெற்றது.