சென்னை- பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகத்தின் சார்பில் ‘யுனெஸ்கோ பார்வையில் தந்தை பெரியார்’ என்ற தலைப்பில் மகளிர் கருத்தரங்கம் நடைபெற்றது.
இக்கருத்தரங்கை அகில இந்தியக் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குஷ்பு தொடங்கி வைத்துச் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
“பெரியாருக்கும் எனக்கும் சம்பந்தம் இருக்கிறது. எங்கோ பிறந்து வளர்ந்தாலும் என்னை அறியாமல் என்னுடைய சிந்தனையில் பெரியாரின் கொள்கைகள் இருந்துள்ளன.
பகுத்தறிவு என்றால் என்ன? என்று தெரியாமல் வளர்ந்தவள் நான். மும்பையில் இருந்தபோதே எனக்கு மதம், சாதி, இனம் போன்றவற்றில் உடன்பாடு இருந்தது இல்லை.
கடவுள் இருக்கிறாரா? என்று எனக்குத் தெரியாது. எனது சந்தேகங்களுக்கு யார் பதில் அளிக்கிறாரோ அவரை நான் கடவுளாகப் பார்க்கிறேன். எனக்கு ஆறாவது அறிவைக் கடவுள் தரவில்லை; எனது பெற்றோர் தந்தனர்.அதனால் அவர்களைத்தான் நான் கடவுளாக நினைக்கிறேன்.
பெண்களுக்குச் சுயமரியாதை வேண்டும் என்று பாடுபட்டவர் பெரியார். எனவே பெண்கள் கழுத்தில் தாலி அணியலாமா? அல்லது வேண்டாமா? என்பது அவரவர்களின் விருப்பம். அணிவதும், அணியாமல் இருப்பதும் அவர்களுடைய சுதந்திரம்.
படிப்பு இல்லாதவர்களிடம் தான் துணிச்சல் அதிகம் இருக்கும் என்று கி.வீரமணி அய்யா இங்கே சொன்னார். நானும் படிக்காதவள் தான். அதனால் தான் என்னிடம் துணிச்சல் அதிகம் இருக்கிறது.
இன்றைய பெண்கள் சில நேரங்களில் சமுதாயத்துக்குப் பயந்து துணிச்சலை வெளிகாட்டுவது இல்லை. நான் ஒரு பெரியார்வாதி. எனவே என்னிடம் திமிரும், கொழுப்பும் அதிகமாகவே இருக்கிறது.
நான் சினிமாவுக்கு வந்து பேரும் புகழும் பணமும் சம்பாதித்திருந்தாலும் அதையெல்லாம் விட, பெரியார் பிறந்தநாள் விழாவில் இன்று பேசுவதைத் தான் நான் பெரும் சாதனையாக நினைக்கிறேன்” என்று பேசினார்.