கோலாலம்பூர்- கடந்த 16ஆம் தேதி நடைபெற்ற சிவப்புச் சட்டை பேரணிக்குப் பின்னர் மாநகரில் மேற்கொள்ளப்பட்ட சுத்தப்படுத்தும் பணிக்காக 50 ஆயிரம் ரிங்கிட் தொகையை அளிக்க அப்பேரணியின் ஏற்பாட்டாளர்கள் சம்மதித்துள்ளனர்.
இப்படியொரு செலவை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பது தங்களுக்கு நன்றாகத் தெரியும் என பெசாகா (Federation of National Silat Associations – Pesaka) தலைவர் முகமட் அலி ருஸ்தாம் தெரிவித்துள்ளார்.
மொத்தத் தொகையான 50 ஆயிரம் ரிங்கிட்டில், 38 ஆயிரம் ரிங்கிட் கட்டணமானது கழிவு மேலாண்மை மாநகராட்சியான ஆலம் ஃபுளோராவால் விதிக்கப்பட்டுள்ளது என்றும், மீதமுள்ள 12 ஆயிரம் ரிங்கிட் தொகையானது கோலாலம்பூர் நகர மன்றம் குறிப்பிட்டுள்ள தொகை என்றும் கோலாலம்பூர் மேயர் முகமட் அமின் நோர்டின் கூறினார்.
இந்நிலையில், “பேரணிக்குப் பின்னர் குவிந்த குப்பைகளை அகற்றுவதற்கான கட்டணத்தை செலுத்தாமல் ஓடி ஓளிந்துவிட மாட்டோம்” என மலாய் அரசு சாரா இயக்கங்களின் கூட்டமைப்புத் தலைவரான ஜமால் முகமட் யூனோஸ் தெரிவித்துள்ளார்.
பெர்சே 4 பேரணிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கடந்த 16ஆம் தேதி சிவப்புச் சட்டை பேரணி பாடாங் மெர்போக்கில் நடைபெற்றது.
முன்னதாக இம்மாத துவக்கத்தில் பெர்சே 4 பேரணிக்குப் பின்னர், சுத்தப்படுத்தும் பணிக்காக அதன் ஏற்பாட்டாளர்கள் 65 ஆயிரம் ரிங்கிட் செலுத்த வேண்டும் என கோலாலம்பூர் மாநகர மன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.