கோலாலம்பூர் – வழக்கமாக மலேசியாவில் வெள்ளிக்கிழமை வெளியாக வேண்டிய படம், ஒருநாள் தாமதித்து நேற்று சனிக்கிழமை தான் வெளியானது. அதற்குள் இந்தப் படத்தைப் பற்றி அரசல் புரசலாக பேஸ்புக்கில் பல விமர்சனங்களைப் படிக்க நேர்ந்தது. “18 வயது காரர்களுக்கு” மட்டும் என்று எச்சரிக்கையும் செய்திருந்தார்கள்.
திரையரங்கு சென்று டிக்கெட் கவுண்டரில் இருந்த பெண்ணிடம் காசை நீட்டி, “திரிஷா இல்லன்னா நயன்தாரா குடுங்க” என்று கேட்கும் போதே வாய் சற்று இடறியது. அதற்கு அவர் பதிலுக்கு கேட்ட கேள்வி என்னை இன்னும் நெளிய வைத்தது.
“எத்தனை பேர்?” – “ஒரு ஆளு தான்” என்று கூறிவிட்டு டிக்கெட்டை வாங்கினேன்.
படத்தின் தலைப்பே இப்படியா என்று எண்ணியபடி படம் பார்க்கச் சென்றேன்.
‘திரிஷா இல்லன்னா நயன்தாரா’ படம் எப்படி இருந்தது? ஆபாசமா?
பார்ப்போம்..
கதைச் சுருக்கம்
கதைப் படி கதாநாயகன் ஜீவி பிரகாஷ், பிறக்கும் போதே தனது அருகில் இரு பெண் குழந்தைகளுடன் பிறக்கிறார். அந்த இரு பெண் குழந்தைகளின் குடும்பமும் ஜீவி பிரகாஷ் குடும்பம் வசிக்கும் அதே காலனியில் வசிப்பதால், சிறுவயது முதல் அவர்களுடனேயே வளர்ந்து வாலிபர் ஆகிறார்.
வாலிபப் பருவத்தை எட்டியவுடன் ஹார்மோன்ஸ் வேலை செய்ய ஆரம்பிக்க, அப்போது தான் தனது தோழிகளின் அழகு கண்ணுக்குத் தெரிகிறது. உடனே அதில் ஒரு பெண்ணான ஆனந்தியைக் காதலிக்கிறார். அவர்கள் இருவருக்கும் இடையே ஒரு பிரச்சனையால் காதல் பிரிந்துவிட அடுத்ததாக இன்னொரு தோழி மனீஷா யாதவை காதலிக்கிறார். அந்தக் காதலிலும் பிரச்சனை ஏற்பட மீண்டும் ஆனந்தியைக் காதலிக்கிறார்.
கடைசியில் ஆனந்தியைக் கைப்பிடித்தாரா? மனீஷாவைக் கைப்பிடித்தாரா? என்பது தான் கிளைமாக்ஸ்.
ஆதிக் ரவிச்சந்திரன் என்பவர் படத்தை இயக்கியிருக்கிறார்.
நடிப்பு
இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ் இவ்வளவு அழகாக நடிப்பார், நடனம் ஆடுவார் என்று ஒரு சில வருடங்களுக்கு முன் சொல்லியிருந்தால், யாரும் நம்பியிருக்கமாட்டார்கள். அந்த அளவிற்கு நடிப்பிலும், நடனத்திலும் நன்றாகத் தேறியிருக்கிறார்.
பார்க்க ஸ்கூல் பைனாகவும் தெரிகிறார், மீசை வைத்து வாலிபராகவும் தெரிகிறார். இந்த வசதி தமிழ்சினிமாவில் தனுஷுக்கு மட்டும் தான் இருந்தது. இப்போது ஜீவிக்கும் அது பொருந்துகிறது.
முகத்தை ஒருமாதிரி சுழித்துக் கொண்டு, “ஏய்.. என்னை நீ அங்கத் தொட்ட, நான் உன்னை இங்கத் தொட்டேன். நமக்குள்ள பாதி முடிஞ்சிருச்சுடி” என்று பிஞ்சிலேயே பழுத்தவனின் அத்தனை அடையாளங்களையும் தனது ஜீவா கதாப்பாத்திரத்தின் மூலம் தத்ரூபமாக வெளிப்படுத்தியிருக்கிறார் ஜீவி.
‘கயல்’ ஆனந்தி.. அடுத்த சினேகாவாக, ஜோதிகாவாக இருப்பார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஒரு குடும்பப்பாங்கான, குழந்தை முகம் கொண்ட நடிகை. இந்தப் படத்தில் அவருக்கு ஆபாசமான காட்சிகள் எதுவும் இல்லை என்றாலும், அவர் ஏற்றுக் கொண்டிருக்கும் கதாப்பாத்திரம் பேசும் வசனங்கள் தான் சலசலப்பை ஏற்படுத்துகிறது.
“வேணும்னா எங்கம்மா இல்லாதப்ப வீட்டுக்கு வா.. ஒருநாள் என்னை என்ன வேணாலும் செஞ்சிட்டு இந்த ஊரவிட்டு ஓடிரு” படத்தில் ஆனந்தி பேசும் வசனங்களுக்கு இது ஒரு உதாரணம்.
‘கயல்’ படத்திற்குப் பிறகு, ஆனந்தி மீது ரசிகர்களுக்கு ஒருவித குழந்தைத்தனமான ஈர்ப்பு ஏற்பட்டிருப்பது இயல்பு. ஆனால் அந்த ரசனையை இந்தப் படம் அதை சற்று அசைத்துப் பார்க்கிறது. கேமரா கோணம் ஆனந்தி மீதான ரசனையை மாற்ற முயற்சி செய்திருக்கிறது.
அடுத்ததாக, மனீஷா யாதவ்.. சேட்டுப் பெண்ணாக நடித்திருக்கிறார். கண்களால், முக பாவனைகளால், உடைகளால் ரசிகர்களைக் கிறங்கடிக்கிறார். இவர் பேசும் வசனம் அதை விட.. “லவ் தான் மேட்டரு.. மேட்டரு தான் லவ்வு” என்கிறார் தடாலடியாக. மற்றபடி மனீஷாவுக்கு ஒரு கவர்ச்சிப் பாடல் அவ்வளவு தான் படத்தில்.
காதலை சேர்த்து வைக்கும் கதாப்பாத்திரத்தில் சிம்ரன் நடித்திருக்கிறார். என்றாலும் அவர் பெரிதாக ஈர்க்கவில்லை.
படத்தில் இரட்டை அர்த்த வசனங்கள் பேசுவதற்கென்றே வைக்கப்பட்ட ஒரு கதாப்பாத்திரத்தில் விடிவி கணேஷ். ஜீவிக்கு சித்தப்பாவாக வருகிறார். ஆனால் படம் முழுவதும் சித்தப்பாவாக இல்லாமல் சக நண்பனைப் போல் ஒன்றாக மது அருந்துகிறார். பெண்களைப் பற்றி ஜீவிக்கு அறிவுரை கூறுகிறார்.
ஒளிப்பதிவு, இசை
ரிச்சர்டு நாதன் ஒளிப்பதிவு பளிச்சென இருக்கின்றது. கதைக்குத் தேவையான வகையில் காட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அதே போல் படத்தில் பாடல்களும், பின்னணி இசையும் ஓகே இரகம். தலைப்புப் பாடல் 80-களில் வருவது போல் அமைத்திருப்பது ரசிக்க வைத்தது.
படம் ஆபாசமா?
படத்தில் ஆபாசம் என்பது காட்சிகளாக இல்லை. வசனங்கள் தான் அதைத் தருகின்றன. படம் முழுவதும் சரமாரியாக கெட்ட வார்த்தைகளைப் பேசுகிறார் ஜீவி.
நிஜ வாழ்க்கையில் நாம் காணும் ஒரு சராசரி வாலிபனை எந்த ஒரு சென்சாரும் செய்யாமல் அப்படியே நம் முன் கொண்டு வந்து நிறுத்துகிறது படம்.
குரூப் ஸ்டடி என்ற பெயரில் உல்லாசத்திற்குத் திட்டமிடுவது, பாடப் புத்தகத்தில் மறைத்து வைத்து கவர்ச்சிப் படங்களைப் பார்ப்பது போன்ற அத்தனை விசயங்களும் படத்தில் இடம்பெற்றிருப்பதாலோ என்னவோ, திரையரங்கு முழுவதும் இளைஞர்களால் நிரம்பி வழிந்ததோடு, ஒவ்வொரு இரட்டை வசனத்திற்கும் அத்தனை கைதட்டல்கள்..
இந்தப் படத்தால், தற்போது கிளம்பியிருக்கும் ஒரு சர்ச்சை என்னவென்றால், படத்தில் ஒரு காட்சியில், “எனக்கு ஒரு வெர்ஜின் பொண்ணு தான் வேணும்” என்கிறார் ஜீவி, “வெர்ஜினா அது டையனோசர் காலத்திலேயே அழிஞ்சு போச்சு” என்கிறார் கணேஷ்..
மொத்தத்தில் இது குடும்பத்தோடு, குறிப்பாக வீட்டில் பருவ வயதில் இருக்கும் குழந்தைகளோடு பார்க்கக் கூடிய படம் அல்ல..
– ஃபீனிக்ஸ்தாசன்