கரூர் – மதிமுக-வில் இருந்து ஏற்கனவே பல முக்கியப் புள்ளிகள் வெளியேறிவிட்டனர். அது போதாதென்று தனக்கு எதிராகச் செயல்படுவதாகக் கூறி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வேறு மேலும் சில முக்கியப் பிரமுகர்களை வெளியேற்றி வருகிறார்.
நேற்று திடீரெனக் கரூர் மாவட்டச் செயலாளர் பரணி கே.மணியை வைகோ வெளியேற்றினார். அதற்கு முன் புதுச்சேரி மாநில மதிமுக பொறுப்புக் குழுத் தலைவராக இருந்த ஹேமா பாண்டுரங்கனை நீக்கினார்.
வைகோ-வின் இத்தகைய செயலைக் கண்டித்து கரூர் மாவட்ட நிர்வாகிகள் பத்துக்கும் மேற்பட்டோர் ராஜினாமா கடிதம் அளித்துள்ளனர். அவர்களைத் தொடர்ந்து பலரும் மதிமுக-வை விட்டு வெளியேற இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தன்னை வைகோ கட்சியிலிருந்து நீக்கியது குறித்து பரணி கே.மணி கூறியதாவது: “வைகோ மதிமுகவைத் துவக்கிய போது கட்சிக்கு வந்தவன் நான்.பல பொறுப்புகளில் சிறப்பாகப் பணியாற்றியவன் நான்.
சமீப காலமாக, வைகோ தவறான முடிவுகளை எடுத்து வருகிறார்; மாற்றி மாற்றிப் பேசுகிறார்; நிலையாகச் செயல்பட மறுக்கிறார்.
கட்சி நடவடிக்கைகளில் யாரையும் நம்புவதும் இல்லை; கலந்து பேசி முடிவெடுப்பதும் இல்லை; வைகோவின் இந்தப் போக்கு யாருக்கும் பிடிக்கவில்லை.
வைகோ, தான் துவக்கிய கட்சியை, தானே அழித்து விடுவார். விரைவில், என் ஆதரவாளர்களுடன் திமுக- வில் இணைவேன்” என்றார் பரணி கே.மணி.