கோலாலம்பூர்- பெட்டாலிங் சாலையில் வரும் சனிக்கிழமையன்று மீண்டும் சிவப்புச் சட்டை பேரணி நடத்தப்பட்டால், அதில் பங்கேற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது.
பொது ஒழுங்கு மற்றும் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் எந்தவொரு செயலையும் ஏற்க இயலாது என நகர காவல்துறை தலைமை ஆணையர் தாஜுடின் முகமட் இசா தெரிவித்தார்.
“பேரணிகள் மற்றும் ஆர்ப்பாட்டங்களுடன் நாங்கள் எப்போதுமே உடன்பட்டதில்லை. எச்சரிக்கையை மீறி போராட்டக்காரர்கள் செயல்படுவார்களேயானால், காவல் துறையின் முழு பலத்தையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்,” என்று தாஜுடின் கூறினார்.
இனப் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்படும் எந்தவொரு தனிநபர் அல்லது குழுவின் மீதும் நடவடிக்கை எடுக்க காவல்துறை சிறிதும் தயங்காது என்றார் அவர். மக்களின் பாதுகாப்புக்கு மட்டுமே காவல்துறை முன்னுரிமை அளிக்கும் என்றும் அவர் கூறினார்.
“மீண்டும் ஒரு பேரணியை நடத்தப் போவது குறித்து அம்னோ சுங்கை பெசார் தலைவர் டத்தோ ஜமால் யூனுசிடம் இருந்து இதுவரை எந்தவொரு கோரிக்கையும், அனுமதி கோரும் கடிதமும் காவல்துறைக்கு வரவில்லை. எந்தவொரு பேரணியை நடத்துவதாக இருந்தாலும் உரிய நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டியது அவசியம். பேரணி நடத்த விரும்பினால், அதற்குரிய இடத்தில் நடத்தப்பட வேண்டும்” என்று தாஜுடின் மேலும் வலியுறுத்தினார்.