வாஷிங்டன் – திட்டமிடப்பட்டதோ அல்லது எதிர்பாராமல் நிகழ்ந்ததோ தெரியவில்லை. எப்போதும் இல்லாத அளவுக்கு உலகின் மூன்று முக்கியத் தலைவர்கள் சில நாட்களுக்கு அமெரிக்காவை முற்றுகையிட்டிருப்பார்கள்.
அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் போப்பாண்டவருக்கு ஒபாமா தம்பதியர் வரவேற்பு வழங்குகின்றனர்.
நேற்று வாஷிங்டன் நகரை வந்தடைந்த போப்பாண்டவர் பிரான்சிசை அமெரிக்க அதிபர் ஒபாமா தம்பதியர் நேரில் சென்று வரவேற்றார்கள். பின்னர் இன்று புதன்கிழமை வெள்ளைமாளிகையில் போப்பாண்டவருக்கு அவர்கள் வரவேற்பு அளித்தார்கள்.
வெள்ளை மாளிகையின் தென் பகுதி வாசலில் போப்பாண்டவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதற்கிடையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் தனது அயர்லாந்து வருகையை முடித்துக் கொண்டு, புதன்கிழமை மாலையே அமெரிக்கா நோக்கி புறப்பட்டிருக்கின்றார்.
அதோடு, சீன அதிபர் ஜீ ஜின்பிங்க் தற்போது இரண்டாவது நாளாக அமெரிக்க சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
இதுபோன்று, மூன்று முக்கிய உலகத் தலைவர்கள் ஏறத்தாழ ஒரே காலகட்டத்தில் ஒரு நாட்டுக்கு வருகை தருவது மிக அபூர்வமாகவே நிகழும் என அரசியல் பார்வையாளர்கள் கூறியுள்ளனர்.