பெட்டாலிங் ஜெயா- நாடு முழுவதும் நிலவிய மோசமான புகை மூட்டம் காரணமாக மூடப்பட்ட பள்ளிகள் அனைத்தும் இன்று வியாழக்கிழமை திறக்கப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.
அதில் கடந்த இரு தினங்களாக மூடப்பட்டிருந்த ஜோகூர் மாநில பள்ளிகளும் திறக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
காற்று மாசு குறியீட்டு புள்ளிகளை நாடு முழுவதும் உள்ள மாநில கல்வித்துறை மற்றும் மாவட்ட கல்வி அலுவலகங்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என கல்வி அமைச்சு அறிவுறுத்தி உள்ளது.
காற்று மாசு குறியீட்டு எண்களில் மாற்றங்கள் ஏற்படும் பட்சத்தில் மாநில கல்வித்துறை மற்றும் மாவட்ட கல்வி அலுவலகங்கள் சூழ்நிலைக்கேற்ப உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்றும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
“புதன்கிழமை மாலை 4 மணியளவில் காற்றின் தரம் சற்றே முன்னேற்றம் கண்டுள்ளது. எனினும் பல இடங்களில் காற்றின் தரமானது மிதமான, ஆரோக்கியமற்ற நிலையிலேயே காணப்படுகிறது. ஆயினும் பள்ளிகளின் வழக்கமான செயல்பாடு நீடிப்பதில் சிக்கல் ஏதும் இல்லை” என கல்வி அமைச்சின் அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது.
(படம்: நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை கோலாலம்பூரின் புகைமூட்ட நிலைமையைக் காட்டும் படம். பெட்ரோனாஸ் இரட்டைக் கோபுரத்தின் பின்னணியில் புறாக்கள் புகைமூட்டத்தின் நடுவே பறந்து திரியும் காட்சி)