Home Featured நாடு தாய்மொழி வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும்: கமலநாதன் உறுதி

தாய்மொழி வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும்: கமலநாதன் உறுதி

629
0
SHARE
Ad

P-Kamalanathanகோலாலம்பூர்- தாய்மொழி வகுப்புகளுக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்படாது என்றும் அந்த வகுப்புகள் வழக்கம்போல் நடைபெறும் என்றும் கல்வித்துறை துணை அமைச்சர் கமலநாதன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அளித்துள்ள பேட்டி ஒன்றில், கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ மகாட்சிர் காலிட்டுடன் நடத்தப்பட்ட சந்திப்பின்போது, இந்த விவகாரத்தின் தீவிரத்தன்மை குறித்து தாம் விளக்கியதாகவும், அதை ஏற்றுக்கொண்ட அமைச்சர் உடனடியாக நிதி ஒதுக்கீடு குறைப்பு என்ற முடிவை திரும்பப் பெற்றதாகவும் அவர் கூறியுள்ளார்.

“ஒரு பாரம்பரியத்தை பாதுகாக்கவும் முன்னேறச் செய்வதற்கும் மொழிகள் தான் சக்திவாய்ந்த ஆயுதங்களாக உள்ளன. எனவே தாய்மொழியை பரவச் செய்ய மேற்கொள்ளப்படும் நடவடிக்கையானது பல்இனக் கல்வியை ஊக்கப்படுத்த உதவும். மேலும் மொழிவாரியாகவும் கலாச்சார ரீதியாகவும் உலகெங்கும் உள்ள மரபுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும்” என்றும் கூறியிருக்கும் கமலநாதன்,

#TamilSchoolmychoice

“தாய்மொழி வகுப்புகளை கிடப்பில் போடுவதென்பது சிக்கன நடவடிக்கைக்கான சிறந்த நடவடிக்கை அல்ல. செலவுகளைக் குறைக்க இதைவிட வேறு வழிமுறைகள் உள்ளன” என்றும் தெரிவித்துள்ளார்.

முன்னதாக தாய்மொழி வகுப்புகளுக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்படும் என்ற கல்வி அமைச்சின் அறிவிப்புக்கு சமூக வலைதளங்கள் வழி ஏராளமானோர் தங்களது கடும் எதிர்ப்பை பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியமும், தாய்மொழி வகுப்புகளுக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளதை மஇகா கடுமையாக எதிர்க்கும் என அறிவித்திருந்தார்.