Home Featured நாடு மஇகா தேர்தல்: உதவித் தலைவர் பதவிக்கு சுந்தர் சுப்ரமணியம் போட்டியா?

மஇகா தேர்தல்: உதவித் தலைவர் பதவிக்கு சுந்தர் சுப்ரமணியம் போட்டியா?

572
0
SHARE
Ad

SUNTHERகோலாலம்பூர்- மஇகா முன்னாள் துணைத் தலைவர் டான்ஸ்ரீ சி. சுப்ரமணியத்தின் மகனும், பழைய கிள்ளான் சாலை மஇகா கிளையின் நடப்புத் தலைவருமான சுந்தர் சுப்ரமணியம், மஇகா உதவித் தலைவர் பதவிக்கான தேர்தலில் களமிறங்குவது குறித்து தீவிரமாகப் பரிசீலித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுந்தர் சுப்ரமணியம் கூட்டரசுப் பிரதேசத்தில் உள்ள மஇகா செபூத்தே தொகுதியின் பேராளரும் ஆவார்.கடந்த 2013இல் மஇகா மத்திய செலவையின் உறுப்பினராக சுந்தர் சுப்ரமணியத்தை, அப்போதைய மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ பழனிவேல் நியமித்தார்.

பின்னர் அதே ஆண்டு மத்திய செயலவைக்கு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்ட சுந்தர் சுப்ரமணியம், 23 மத்திய செயலவை உறுப்பினர்களில் ஒருவராக வெற்றி கண்டார். எனினும் இந்தத் தேர்தல் செல்லாது என சங்கப் பதிவகம் பின்னர் அறிவித்தது.

#TamilSchoolmychoice

இந்நிலையில் தனது தந்தையின் வழிமுறைகளைப் பின்பற்றி சுந்தர், உதவித் தலைவர் பதவிக்கான போட்டியில் களமிறங்க வேண்டுமென டான்ஸ்ரீ சுப்ராவின் ஆதரவாளர்கள் அவரிடம் வலியுறுத்தி வருவதாக மஇகா தகவல்கள் தெரிவிக்கின்றன.

மஇகாவின் நடப்பு உதவித் தலைவர்கள் 2 பேருமே, தற்போது அப்பதவிக்காகப் போட்டியிடவில்லை என்பதால், உதவித் தலைவர் தேர்தலில் வெற்றி பெற சுந்தருக்கு நல்ல வாய்ப்பு இருப்பதாக அவரது நெருங்கிய நண்பர்களும், ஆதரவாளர்களும் அவரிடம் கூறி வருவதாகத் தெரிகிறது.

நடப்பு உதவித் தலைவர்களான டத்தோ சரவணன் மற்றும் டத்தோ தேவமணி ஆகிய இருவருமே மஇகா தேசிய துணைத் தலைவர் பதவிக்கு குறி வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அவர்கள் இருவரது முடிவு காரணமாக உதவித் தலைவர்கள் பதவிக்கு யார் வேண்டுமானாலும் குறி வைக்கலாம் எனும் வெளிப்படையான போட்டி உருவாகியுள்ளது. இதன் காரணமாகவே உதவித் தலைவருக்கான தேர்தலில் களமிறங்குவது குறித்து சுந்தர் தீவிரமாகப் பரிசீலித்து வருவதாகத் தெரிகிறது.

“கடந்த 2013இல் மத்திய செயலவை உறுப்பினராக கணிசமான வாக்கு வித்தியாசத்தில், சுலபமாக வெற்றி பெற்றார் சுந்தர். இந்த வெற்றி தந்த நம்பிக்கையால் இம்முறை உதவித் தலைவர் தேர்தலில் களமிறங்கி தமது வாய்ப்பை முயற்சித்துப் பார்க்கலாம் என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டுள்ளது” என்கிறார் சுந்தரின் ஆதரவாளர்களில் ஒருவர்.

இம்முறை கட்சித் தேர்தலில், எந்தவொரு பதவிக்கும், யாரையும் தாம் ஆதரிக்கப் போவதில்லை என மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். அவரது இந்த உறுதிமொழியும் உதவித் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாக சுந்தர் எடுத்துள்ள முடிவுக்கு முக்கியக் காரணம் எனக் கூறப்படுகிறது.