கோலாலம்பூர் – மஇகா வட்டாரங்களும், தகவல் ஊடகங்களும் பரவலாக எதிர்பார்த்ததற்கு மாறாக, தேசிய உதவித் தலைவருக்குத் தான் போட்டியிடவில்லை என்றும், மத்திய செயற்குழு உறுப்பினர் பதவிக்கு மட்டுமே போட்டியிடப் போவதாகவும் கல்வித் துணை அமைச்சர் பி.கமலநாதன் இன்று அதிர்ச்சி தரும் வகையில் அறிவித்தார்.
தலைநகர், மஇகா தலைமையகத்தில் உள்ள நேதாஜி மண்டபத்தில், இன்று பிற்பகல், அரங்கம் நிறைந்த பத்திரிக்கையாளர்கள், கட்சி உறுப்பினர்கள் மத்தியில் கமலநாதன் இந்த அறிவிப்பைச் செய்தார்.
இந்தப் பத்திரிக்கையாளர் கூட்டத்தில் தேசியத் துணைத் தலைவர் வேட்பாளரான டத்தோ எம்.சரவணன், உதவித் தலைவர் வேட்பாளர்களில் ஒருவரான டத்தோஸ்ரீ வேள்பாரி ஆகியோரும் கலந்து கொண்டனர்.
துணைக் கல்வி அமைச்சராகவும், உலுசிலாங்கூர் நாடாளுமன்ற உறுப்பினராகவும் தனது சேவைகளை மேலும் செம்மையுடனும், சிறப்புடனும் மேற்கொள்ளப் போவதாக தனது உரையின் போது உறுதியளித்த கமலநாதன், கட்சியில் தான் பணியாற்ற மத்திய செயற்குழு உறுப்பினர் பதவி மட்டுமே போதுமானது எனத் தான் கருதுவதாகவும் கூறினார்.