கோலாலம்பூர்- மஇகா துணைத் தலைவர் பதவிக்கு தாம் போட்டியிடுவது ஏன்? என டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி விளக்கம் அளித்துள்ளார். எதிர்வரும் நவம்பர் 6ஆம் தேதி நடைபெற உள்ள மஇகா தேர்தலில் கட்சியின் தேசியத் துணைத் தலைவர் பதவிக்கு தானும் ஒரு வேட்பாளராகப் போட்டியிட உள்ளதை அறிவிப்பதில் மகிழ்ச்சி கொள்வதாக அவர் இது தொடர்பில் விடுத்துள்ள அறிக்கை வழி தெரிவித்துள்ளார்.
முன்னாள் துணை அமைச்சரும் தற்போதைய நடப்பு பேராக் மாநில சட்டமன்றத்தின் அவைத் தலைவருமான தேவமணி தனது அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:
“கட்சி மறுதேர்தலை நடத்துவதற்கு, சங்கப் பதிவகத்தால் அங்கீகரிக்கப்பட்ட, 2009ல் மத்திய செயலவைக்கு தேர்வான நிர்வாகிகள் பட்டியலில், நான் இரண்டாம் இடத்தில் உள்ளதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். எனவே கட்சி முன்னேற்றத்துக்கான அடுத்தக் கட்ட மாற்றங்கள் சுமுகமாக நிகழ உதவும் வகையில், எனது தற்போதைய தகுதியை தக்க வைத்துக் கொள்ள விழைகிறேன்.”
“கடந்த இரு வாரங்களாக மாநில மாநாடுகளில் பங்கேற்று வரும் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம், கிளைத் தலைவர்கள் மத்தியில் உரையாற்றும்போது, கட்சியின் அனைத்து மட்டங்களிலும் நல்ல தலைமைத்துவம் தேவை என வலியுறுத்தி உள்ளார்.”
“இந்திய சமுதாயத்தில் சமூக, பொருளாதார அடிப்படையில் உருமாற்றங்கள் ஏற்பட வேண்டும் என்றும், குறிப்பாக கல்வி மற்றும் பொருளாதார ரீதியில் சமுதாயம் வலுப்பெற வேண்டுமென்றும் தெளிவானதொரு குறிக்கோளை அவர் தமது உரையில் முன்வைத்திருந்தார்.”
“கடந்த 1975 முதல் 2004 வரை, ஒரு கல்வியாளராக அனைத்து மட்டங்களிலும் செயல்பட்ட அனுபவம் உள்ளதால், கல்விக்கான கொள்கை உள்ளீடுகள் மற்றும் திட்டங்களை அமலாக்கம் செய்வதில் எனது பங்களிப்பைத் தர இயலும் என நான் நம்புகின்றேன்.”
“ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் வாயிலாக, கடந்த 1983 முதல் 2004 வரை பல்வேறு கல்வித் திட்டங்களை செயல்படுத்தியதில் எனக்கு பரவலான பெரும் அனுபவம் உள்ளது.”
“கிளைத் தலைவர், பொருளாளர், சமூக நல வியூக அறவாரியத்தின் (Yayasan Strategic Social )தலைவர், தேசிய உதவித் தலைவர் என மஇகாவில் பல்வேறு நிலைகளில் நான் பொறுப்பு வகித்துள்ளேன். தேர்தலில் நான் போட்டியிடுவது, மஇகாவின் சிறப்பான எதிர்காலத்திற்காக தேசியத் தலைவரும், கட்சியும் கொண்டுள்ள தொலை நோக்கு எண்ணத்திற்கு உதவும் என்பது உறுதி.”
இவ்வாறு தேவமணி தெரிவித்துள்ளார்.