மஇகா அரசியலில் கமலநாதன் அடுத்த கட்டத்திற்கு முன்னேற, நடக்கவிருக்கும் கட்சித் தேர்தல்கள்தான் சிறந்த வாய்ப்பு என்று மஇகா வட்டாரங்களில் பரவலாகப் பேசப்படும் நிலையில், அவரது இம்முடிவுக்கு என்ன காரணம் என்பதே தற்போது அந்த வட்டாரங்களின் பரபரப்பான விவாதத் தலைப்பாக, உள்ளது.
வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்தும் ஏன் பின்வாங்கினார்?
கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை உதவித்தலைவர் பதவிக்கான மிக வலுவான வேட்பாளர்களில் ஒருவராக கமலநாதன் கருதப்பட்டார். அவ்வாறு போட்டியிட்டிருந்தால் உதவித்தலைவர் பதவிக்கான போட்டியில் இவர் மட்டுமே துணை அமைச்சராக இருந்திருப்பார். அதன் காரணமாக அவரது வெற்றி வாய்ப்புகளும் பிரகாசமானதாக இருந்தன.
கட்சித் தேர்தலில் அடுத்தக் கட்டத்தில் போட்டியிட கமலநாதனுக்கு இதுவே உகந்த நேரம் என்று பலரும் கருதும் நிலையில், அவரது இம்முடிவானது, மஇகா விவகாரங்களைக் கூர்ந்து கவனித்து வருபவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிலும் மூன்று உதவித்தலைவர் பதவிகளும் தற்போது காலியாக இருக்கின்றன என்பதாலும், நடப்பு உதவித் தலைவர் என யாருமில்லை என்பதாலும், கமலநாதன் வெற்றி பெற இந்த முறை வெற்றி வாய்ப்புகள் அதிகமாக இருந்தன.
தனது அறிவிப்பைச் செய்வதற்கு சில நாட்களுக்கு முன்பு வரைகூட
பல்வேறு தொகுதித் தலைவர்களிடம், தாம் உதவித்தலைவர் தேர்தலில் போட்டியிட்டால் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும்? என்று கமலநாதன் கலந்தாலோசித்து உள்ளார் என தகவலறிந்த மஇகா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தேசியத் தலைவரின் தலையீடு இல்லை
எனினும் கட்சியில் யார் எந்தப் பதவிக்கு போட்டியிட வேண்டும், யார் யார், எவர் எவரை எதிர்த்துப் போட்டியிட வேண்டும் அல்லது பின்வாங்க வேண்டும் என்பது போன்ற விஷயங்களில் தேசியத் தலைவர் டாக்டர் சுப்ரமணியம் இதுவரையில் தலையிடவில்லை என்றும் மஇகா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக அவரவர் தனிப்பட்ட முறையில், அவர்களின் விருப்பத்திற்கேற்ப முடிவெடுக்க வேண்டும் எனும் உறுதியான நிலைப்பாட்டை அவர் கொண்டிருப்பதாகவும் அவ்வட்டாரங்கள் கூறுகின்றன.
இந்நிலையில் உதவித் தலைவர் பதவிக்கு கமலநாதன் போட்டியிட முடிவு செய்திருப்பதாக ஊடகங்களிலும் தகவல்கள் வெளியானது.
கடந்த 14ஆம் தேதியன்று கட்சித் தேர்தலில் தேசிய நிலையில் ஒரு பதவிக்குப் போட்டியிடுவது தொடர்பில், கமலநாதன் அறிவிப்பார் என்றும் ஊடகங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அது எந்தப் பதவி என்பது அறிவிக்கப்படவில்லை.
இதையடுத்து 14ஆம் தேதி கமலநாதன் உதவித் தலைவருக்குப் போட்டியிடுகிறேன் என்ற பரபரப்பான அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்த்து அவரது பத்திரிக்கையாளர் சந்திப்பில் குழுமியிருந்த தமிழ்ப் பத்திரிக்கைகளின் ஊடகவியலாளர்கள் அவரது அறிவிப்பால் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.
அரசியல் நெருக்குதல் காரணமா?
மிகவும் சர்ச்சைக்குரிய – இந்திய சமுதாயத்தினரின் உணர்ச்சிமயமான பிரச்சனைகளின் மையமான கல்வி அமைச்சில் கமலநாதன் இதுவரை ஓரளவுக்கு சிறப்பாகவே ஆற்றியுள்ள பணிகள் காரணமாக, மஇகா மத்திய செயலவையின் 23 உறுப்பினர்களில் ஒருவராக கமலநாதன் நிச்சயம் வெற்றி பெறுவார் என மஇகா வட்டாரங்கள் கூறுகின்றன.
உதவித் தலைவருக்குப் போட்டியிடவில்லை என்ற அவரது முடிவால் – அதன் மூலம் எழுந்துள்ள அனுதாபத்தால் – மத்திய செயலவைக்கான போட்டியில் அவர் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முதல் நிலையில் தேர்வு செய்யப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
ஆனாலும், அதனால், உதவித் தலைவருக்கான போட்டியிலிருந்து அவர் ஏன் விலகினார் என்பது குறித்த மஇகா பேராளர்களின் ஆருடங்களும், விவாதங்களும் தேர்தல் முடியும் வரை நிற்கவும் போவதில்லை.