கோத்தாகினபாலு- மோசமான புகைமூட்டம் காரணமாக சபா விமான நிலையங்களில் இருந்து புறப்பட வேண்டிய பல விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. இதன் காரணமாக ஞாயிற்றுக்கிழமை நூற்றுக்கணக்கான பயணிகள் திட்டமிட்டபடி பயணம் மேற்கொள்ள முடியாமல் தவித்தனர்.
முதற்கட்டமாக ஞாயிற்றுக்கிழமை காலை 2 விமானச் சேவைகள் ரத்தாகின. தாவாவ் வழித்தடத்தில் இயங்கும் எம்எச் 2121 மற்றும் கோத்தகினபாலு வழித்தடத்தில் இயங்கும் எம்எச் 2122 ஆகிய இரு விமானங்களைத் தொடர்ந்து, கோலாலம்பூர் – தவாவ் இடையேயான விமானமும் ரத்து செய்யப்பட்டது.
நேற்று மாலை 3.15 மணியளவில் தரையிறங்க வேண்டிய அந்த விமானம், மோசமான புகைமூட்டம் காரணமாக குறித்த நேரத்தில் தரையிறங்க முடியாமல், வழி திருப்பிவிடப்பட்டது.
“விமான புறப்பாடு மற்றும் தரையிறக்கம் இரண்டுமே பாதிக்கப்பட்டதால் எங்களுக்கு வேறு வழி இல்லை. இதனால் பயணிகள் தவிப்புடனும், கோபத்துடனும் காணப்பட்டனர். ஆனால் இவ்வளவு மோசமான புகைமூட்டத்திற்கு இடையே விமானங்களை இயக்க இயலாது,” என்று பெயர் வெளியிட விரும்பாத, தவாவ் விமான நிலைய செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
இதற்கிடையே கோத்தாகினபாலுவில் இருந்து தவாவ் செல்ல வேண்டிய மாஸ் விங்ஸ் விமானமும் புகைமூட்டம் காரணமாக புருணைக்குத் திசைதிருப்பப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதே வேளையில், தீபகற்ப மலேசியாவிலும் புகைமூட்ட நிலைமை மோசமாகி, பள்ளிகள் இன்று மூடப்பட்டுள்ளன.