புத்ராஜெயா – நாட்டில் மீண்டும் அதிகரித்துள்ள புகைமூட்டப் பிரச்சனை காரணமாக நேற்று பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள் மூடப்பட்டன. அதனைத் தொடர்ந்து, இன்று புகைமூட்டம் சற்று தணிந்திருந்தாலும் கூட பள்ளிகளுக்கு இன்றும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கல்வியமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கையில், மலாக்கா, நெகிரி செம்பிலான், சிலாங்கூர், கோலாலம்பூர், புத்ராஜெயா, கூச்சிங் மற்றும் சரவாக்கிலுள்ள சமாரஹான் மற்றும் சபாவைச் சேர்ந்த தவாவ் ஆகிய இடங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், சபாவில் லகாட் டத்து, செம்பூர்ணா மற்றும் குனாக், ஜோகூரில் மூவார், லெடாங் மற்றும் செகாமட் ஆகிய மாநிலங்களிலுள்ள பள்ளிகளும் இன்று மூடப்பட்டுள்ளன.
தேசிய அளவில் 3,029 பள்ளிகளும், அதில் படிக்கும் 1,909,842 மாணவர்களும் இந்த புகைமூட்டப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருப்பதாக கல்வியமைச்சு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.