Home Featured இந்தியா விருதுகளை மீண்டும் பெற்றுக் கொள்ளுங்கள்: எழுத்தாளர்களுக்கு சாகித்ய அகாதமி வேண்டுகோள்!

விருதுகளை மீண்டும் பெற்றுக் கொள்ளுங்கள்: எழுத்தாளர்களுக்கு சாகித்ய அகாதமி வேண்டுகோள்!

877
0
SHARE
Ad

201510240443549247_Sahitya-AkademiExecutiveEmergencyAt-the_SECVPFபுதுடில்லி- சகிப்புத் தன்மைக்கும் கருத்து சுதந்திரத்துக்கும் இந்தியாவில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறி, சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர்கள் பலர் அந்த விருதை திருப்பி அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் விருதுகளை ஒப்படைத்தவர்கள் அவற்றை மீண்டும் பெற முன்வர வேண்டும் என சாகித்ய அகாதமி வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பாக அந்த அகாதமியின் அவசர செயற்குழு கூட்டப்பட்டு தீர்மானம் ஒன்றும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய சாகித்ய அகாதமியின் தமிழ் மொழி பிரிவுக்கான செயற்குழு உறுப்பினர் நாச்சிமுத்து, சாகித்ய அகாதமிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தங்கள் விருதுகளை திருப்பிக்கொடுத்த எழுத்தாளர்கள் மற்றும் சாகித்ய அகாதமி பதவிகளை ராஜினாமா செய்த எழுத்தாளர்கள் தங்கள் முடிவுகளை மறுபரிசீலனை செய்யுமாறும் செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகத் தெரிவித்தார்.

பிரபல கன்னட எழுத்தாளர் கல்புர்கி கடந்த ஆகஸ்ட் மாதம் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். குறிப்பாக எழுத்தாளர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது.

இந்த கொந்தளிப்பு அடங்குவதற்குள் மாட்டிறைச்சி உண்ணும் விவகாரம் பெரிதாகி உத்தரபிரதேசத்தில் இஸ்லாமிய முதியவர் படுகொலை செய்யப்பட்டதும், எழுத்தாளர் சுசீந்திர குல்கர்னி தாக்கப்பட்டதும், முற்போக்கு சிந்தனையாளர்கள் மற்றும் எழுத்தாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளன.

இதையடுத்து சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர்கள் பலர் தங்களது விருதை திருப்பி அளித்து வருகின்றனர். இதுவரை 40க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் தங்களது விருதுகளை திருப்பி அளித்துள்ளனர்.

இந்நிலையில் சாகித்ய அகாதமியின் செயற்குழு கூடி இப்பிரச்சினை குறித்து விவாதித்தது. இதையடுத்து எழுத்தாளர்கள் தங்களது விருதுகளை மீண்டும் பெற்றுக்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது.

“சாகித்ய அகாதமி விருதுகள் அரசாங்கம் அளிக்கும் விருது அல்ல. எனினும் இதனை திருப்பிக் கொடுத்து உங்கள் கோபத்தை தெரிவித்துள்ளீர்கள். அதே நேரத்தில் உங்கள் கோபம் தணிந்த பின்னர் மீண்டும் விருதுகளை திரும்ப பெற்றுக் கொள்ளுங்கள் என்று எழுத்தாளர்களுக்கு சாகித்ய அகாதமி வேண்டுகோள் விடுக்கிறது” என்று நாச்சிமுத்து மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்து சுதந்திரத்துக்கு எதிரான போக்கையும், எழுத்தாளர்களுக்கு எதிரான வன்முறையைக் கண்டித்தும், சகிப்புத்தன்மையை முற்றாக மறுக்கும் மனநிலைக்கு எதிராகவும் சாகித்ய அகாதமி செயற்குழு கடுமையான முறையில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது என்றும் அவர் கூறினார்.