சென்னை – முதல்வர் ஜெயலலிதாவையும், தமிழக அரசையும் மது ஒழிப்பு தொடர்பாக விமர்சித்து பாடல்கள் பாடியதற்காக தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள பாடகர் கோவன் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அவர் சிறையில் அடைக்கப்படுவதற்கு முன்னதாக பிரபல நாளிதழ் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், “ஒரு ரூபாய்க்கு இட்லி. ஐந்து ரூபாய்க்கு கழிப்பறை கட்டணம். நூறு ரூபாய்க்கு பருப்பு. லட்ச ரூபாய் தாண்டுகிற கல்விக் கட்டணம் என்று மக்களின் உணர்வுகளைத்தான் பாடலாக்கினேன். இன்னும் பாடவேண்டியவை நிறைய உள்ளன. என் பாட்டில் குற்றமில்லை. மக்கள் விடியலுக்காகப் பாடிக் கொண்டே இருப்பேன்”
“டாஸ்மாக் கொடுமையால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களை, பெண்களை கேட்டால் அவர்களின் உணர்ச்சியின் வெளிப்பாடு அதீதமான மொழியாகவே கேட்கிறது. இந்த அரசு மக்களுக்கான அரசாகவே இருக்கிறது என்று சொல்கிறவர்களை, ‘டாஸ்மாக் என்று ஒன்று தேவையா?’ என பாதிக்கப்பட்டிருக்கும் பெண்களைப் போய் கேட்டுப் பார்க்க சொல்லுங்கள். அப்போதுதான் உண்மை தெரியும். இது ஒரு பொதுவான எல்லோருக்குமான கோபம். மக்களின் உணர்வுகளைத்தான் நான் வெளிக்கொண்டு வந்திருக்கிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.