ஈப்போ – பேராக் சட்டமன்ற அவைத் தலைவர் பதவியை இராஜினாமா செய்வதாக டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணியிடமிருந்து தமக்கு எந்த ஒரு அறிக்கையோ அல்லது கடிதமோ வரவில்லை என பேராக் மந்திரி பெசார் டாக்டர் சாம்பிரி அப்துல் காதிர் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்து நேற்று செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த அவர், “நான் எந்த ஒரு அறிக்கையையோ அல்லது கடிதத்தையோ அவரிடமிருந்து பெறவில்லை. எனவே அது குறித்து தன்மூப்பாகக் கருத்துத் தெரிவிக்க இயலாது” என்று தெரிவித்துள்ளார்.
கடந்த நவம்பர் 6-ம் தேதி நடைபெற்ற மஇகா மறுதேர்தலில் தேவமணி 698 வாக்குகள் பெற்று மஇகா தேசியத் துணைத்தலைவர் பதவியில் வெற்றி பெற்றார்.
இந்நிலையில், மஇகா தேர்தலில் தான் துணைத்தலைவர் பதவியில் வெற்றி பெற்றால், பேராக் சட்டமன்ற அவைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன் என்று தேவமணி கூறியதாக செய்தி ஒன்று வெளியானது குறிப்பிடத்தக்கது.