கோலாலம்பூர்- தனது தனிப்பட்ட வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்ட 2.6 பில்லியன் ரிங்கிட் தொகை குறித்து, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் விரைவில் வாக்குமூலம் அளிக்க இருப்பதாக பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமது முகநூல் பக்கத்தில் அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இந்த விவகாரத்தில் வாக்குமூலம் அளிக்கப்பட வேண்டியது குறித்து அட்டர்னி ஜெனரல் அபான்டி அலி ஏற்கெனவே தமக்கு தெரியப்படுத்தி உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
“வாக்குமூலம் அளிக்க தயாராக உள்ளேன். அரசியல் நன்கொடை தொடர்பில் ஊழல் தடுப்பு ஆணையத்திடம் விளக்கம் அளிப்பேன். இவ்விஷயத்தில் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதன் மூலம், இந்த விவகாரம் தொடர்பான ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணை விரைவில் முடிவடையும் என நம்புகிறேன்” என்று நஜிப் கூறியுள்ளார்.
அரசியல் நன்கொடை விவகாரம் தேசிய அளவில் மட்டுமல்லாது அனைத்துலக அளவிலும் அமளியை ஏற்படுத்தி உள்ளதாக குறிப்பிட்ட அவர், இதன் காரணமாகவே தாம் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க முன்வந்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
நன்கொடை விவகாரம் தொடர்பில் பிரதமரிடம் வாக்குமூலம் பெறப்படும் என ஊழல் தடுப்பு ஆணையம் அறிவித்திருந்தது. பிரதமரிடம் இயன்ற விரைவில் வாக்குமூலம் பெறப்படும் என வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய அந்த ஆணையத்தின் தலைவர் அபு காசிம் முகமட் கூறினார்.
இது தொடர்பாக பிரதமர் அலுவலகத்தை ஊழல் தடுப்பு ஆணையம் தொடர்பு கொண்டதாகாவும், அப்போது வாக்குமூலம் அளிக்க பிரதமர் ஒப்புக் கொண்டதாகவும் அபு காசிம் கூறினார்.
“பிரதமரிடம் எந்தத் தேதியில் வாக்குமூலம் பெறுவது என்பதை முடிவு செய்வதற்காகக் காத்திருக்கிறோம்” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.