லாஸ் ஏஞ்செல்ஸ் – கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், அமெரிக்காவில் கிரிக்கெட் விளையாட்டை பிரபலப்படுத்தும் நோக்கத்துடன் ஆஸ்திரேலிய சுழற்பந்துவீச்சு ஜாம்பவானான வார்னேவுடன் சேர்ந்து முன்னாள் வீரர்களை ஒன்றிணைத்து ஆல் ஸ்டார்ஸ் கிரிக்கெட் தொடர் ஒன்றில் விளையாடி வருகிறார்.
இந்நிலையில் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், தனது பயணத்திட்டத்தில் பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் செய்த குளறுபடிகள் குறித்து மிகுந்த வெறுப்புடன் ஒரு பதிவினை வெளியிட்டு இருந்தார்.
அந்த பதிவில், “ஏமாற்றமாகவும் அதிருப்தியாகவும் உள்ளது. காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டு இருந்த குடும்ப உறுப்பினர்களுக்கு இருக்கைகள் இருந்தும் அதனை பிரிட்டிஷ் ஏர்வேஸ் உறுதி செய்யவில்லை. அக்கறையற்ற அணுகுமுறையுடன் பிரிட்டிஷ் ஏர்வேஸ் செயல்பட்டது” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
அவரின் பதிவைத் தொடர்ந்து பலரும் அந்நிறுவனம் குறித்து தங்கள் கருத்துக்களை பதிவு செய்து இருந்தனர். இதற்கு பதில் அளிக்கும் விதமாக பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம், “இதற்காக வருந்துகிறோம் சச்சின். உங்கள் முழு பெயர் மற்றும் விவரங்களைத் தாருங்கள் அப்போதுதான் தவறை சரி செய்ய முடியும்” என்று தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தது.
இந்த பதிவினை கண்ட அடுத்த சில நொடிகளில் சச்சின் ரசிகர்கள், பிரிட்டிஷ் ஏர்வேசிற்கு எதிராக கடுமையாக கொந்தளித்து விட்டனர். இதனைத் தொடர்ந்து அந்த பதிவினை அந்நிறுவனம் உடனடியாக நீக்கியது. எனினும், அந்நிறுவனத்திற்கு எதிராக ரசிகர்கள் தொடர்ந்து பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.