இலண்டன் – நேற்று இங்கு வெம்ப்ளி அரங்கில் 60 ஆயிரம் இந்திய வம்சாவளியினர் திரண்டு வந்த பிரம்மாண்டமான பொதுக் கூட்டத்தில் பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூனுடன் கலந்து கொண்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.
இந்தப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன் தம்பதியரும் வந்திருந்தனர். மோடியை வெம்ப்ளி அரங்க நுழைவாயிலில் பிரிட்டிஷ் பிரதமர் தம்பதியர் வரவேற்றனர்.
கேமரூனின் மனைவி சமந்தா, சிவப்பு நில சேலை அணிந்து வந்து கூட்டத்தினரை அசத்தினார்.
வெம்ப்ளி அரங்கம் வந்தடையும் மோடியை வரவேற்கும் கேமரூன் தம்பதியர் – சிவப்பு நிற சேலையில் கேமரூனின் மனைவி சமந்தா…
கேமரூன்-மோடி உரைகள் தொடங்குவதற்கு முன்பாக இந்தியாவின் பல மாநில கலாச்சாரங்களையும் பிரதிபலிக்கும் வண்ணம் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
கேமரூன் உரையில் இந்தி வாசகங்கள்
மோடிக்கு முன்னதாக மோடியை வரவேற்று உரையாற்றிய டேவிட் கேமரூன் இந்தியில் சில வாசகங்களையும் உச்சரித்தபோது கூட்டத்தினர் கைதட்டி ஆர்ப்பரித்தனர்.
பிரிட்டன்-இந்தியா இடையிலான நிகழ்ச்சிகளில் தான் இதுவரை காணாத பிரம்மாண்டமான நிகழ்ச்சி இதுவென கேமரூன் வர்ணித்தார்.
இந்தியா ஐநா பாதுகாப்பு மன்றத்தில் நிரந்தர உறுப்பினராக வேண்டியது காலத்தின் கட்டாயம் என்று கூறிய டேவிட் கேமரூன், அதற்காக பிரிட்டன் இந்தியாவை ஆதரிக்கும் என்றும் அறிவித்தார்.
இந்தியாவும் பிரிட்டனும் பயங்கரவாதம் தொடர்பில் ஒரே மாதிரியான சவால்களைச் சந்திக்கின்றனர் என்று கூறிய கேமரூன் “நீங்கள் மும்பாய் வீதிகளில் எதிர்நோக்கிய பயங்கரவாதத் தாக்குதல்களை நாங்கள், இலண்டன் வீதிகளில் எதிர்நோக்கியிருக்கிறோம்” என்றார்.
மோடியைப் பற்றிக் கூறிய கேமரூன், உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டை ஒரு தேநீர் தயாரிப்பாளர் ஆளமுடியாது என்று கூறியவர்களின் தவறு என்பதை நிரூபிக்கும் வண்ணம் மோடி சிறப்பாக ஆட்சி செய்து வருகின்றார் எனப் பாராட்டினார்.
பிரிட்டனில் வாழும் 15 இலட்சம் இந்திய வம்சாவளியினர் பிரிட்டனின் வளர்ச்சியில் அதிகரித்து வரும் பங்களிப்பு குறித்தும் கேமரூன் பெருமிதம் கொண்டார்.
(படம்: இந்தியப் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட டுவிட்டர் படம்)
-செல்லியல் தொகுப்பு