மும்பாய் – தீபாவளிக்கு சல்மான் கான் நடிப்பில் வெளியான “பிரேம் ரத்தன் டான் பாயோ” திரைப்படம் இதுவரை இல்லாத அளவுக்கு, முதல் நாள் திரையீட்டில் அதிக வசூலை வாரிக் குவித்த படமாக சாதனை படைத்திருக்கின்றது.
கடந்த ஆண்டு தீபாவளிக்குத் திரையிடப்பட்ட ஷாருக்கானின் “ஹேப்பி நியூ இயர்” திரைப்படத்தின் வசூலை விட அதிகமான வசூலை பிரேம் ரத்தன் படம் வாரிக் குவித்திருக்கும் அதே வேளையில், இதுவரையிலான இந்திப்படங்களின் வசூல் சாதனை வரிசையில், ஆகக் கூடுதலான முதல் நாள் வசூலைக் கண்ட படமாகவும் இந்தப் படம் திகழ்கின்றது.
பிரேம் ரத்தன் இந்திப் படம் 39 முதல் 40 கோடி ரூபாய் வரை முதல் நாளே வசூலித்ததாக இந்திப் பட வணிக வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
தெலுங்கிலும், தமிழிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டும் இந்தப் படம் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் அவை இரண்டு ஒன்று முதல்ஒன்றரை கோடி ரூபாய் மட்டுமே முதல் நாள் வசூலித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழில் வெளியான தூங்காவனம், வேதாளம் இரண்டு இரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படங்கள் என்பதால், பிரேம் ரத்தனுக்கு அதிகமான தமிழ், தெலுங்கு வாசகர்கள் குவிந்திருக்கமாட்டார்கள் எனக் கருதப்படுகின்றது. தூங்காவனம் தெலுங்குப் பதிப்பாகவும் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பல ஆண்டுகளுக்கு முன்னர் சல்மான் கான்-மாதுரி டிக்சிட் நடிப்பில் வெளிவந்து வசூலில் சாதனை படைத்த சூரஜ் பாட்டியாவின் “ஹம் ஹாப்கே ஹாய் கோன்” திரைப்படத்தின் தொடர்ச்சியாக இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.
அதே இயக்குநர் சூரஜ்பாட்டியாதான் இந்தப் படத்தையும் இயக்கியுள்ளார்.
தீபாவளியைத் தொடர்ந்து வரிசையாக விடுமுறை நாட்கள் என்பதால் இந்தப் படம் தொடர்ந்து வசூலில் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
-செல்லியல் தொகுப்பு