கோலாலம்பூர்- நாட்டின் பல்வேறு பகுதிகளில் முக்கிய இடங்களை தாக்குவதற்கு திட்டமிட்ட குற்றச்சாட்டின் பேரில் ஐவர் கைதாகியுள்ளதாக மலேசியக் காவல் துறைத் தலைவர் (ஜஜிபி) காலிட் அபுபாக்கர் (படம்) தெரிவித்துள்ளார்.
கடந்த 9 மற்றும் 13ஆம் தேதிகளில் ஜோகூரிலும், சிலாங்கூரிலும் குறிப்பிட்ட இந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தீவிரவாத போராளிக் குழுக்களுடன் தொடர்புள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.
கைதான ஐவரும் 22 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள். தீவிரவாத தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட இரு வெவ்வேறு சிறப்பு அதிரடி நடவடிக்கையின் போது ஐவரும் பிடிபட்டனர்.
முன்னதாக சிரியாவில் இயங்கி வரும் ஐ.எஸ்.ஐ.எஸ்., தீவிரவாத அமைப்பில் சேர முயற்சித்த ஐவரும், அவ்வாறு சேர்ந்த பின்னர் கிள்ளான் பள்ளத்தாக்கின் பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தது தெரியவந்துள்ளது.
கைதான சந்தேக நபர்களில் மூவருக்கு ஐ.எஸ்., தீவிரவாத அமைப்புடன் தொடர்புள்ளது. மற்ற இருவரும் “இமாம் மாஹ்டி” (Imam Mahdi) என்ற போராளிக் குழுவுடன் தொடர்பு வைத்துள்ளனர்.
“இவர்களில் நான்கு பேர் உள்நாட்டைச் சேர்ந்தவர்கள். மற்றொருவர் இந்தோனேசியாவைச் சேர்ந்தவர். மேலும் 22 வயதான இந்தோனேசிய நபரும், சுகாதார அமைச்சில் பணிபுரியும் 22 வயதான மருந்தாளுநர் ஒருவரும் கூட தீவிரவாத இயக்கத்தில் சேரத் திட்டமிட்டிருந்தனர். இவர்கள் இருவரையும் ஏற்கெனவே ஜோகூர் போலீசார் கைது செய்ததுடன், குடிநுழைவு சட்டத்தின் கீழ் விசாரணையும் நடத்தியுள்ளனர்.
“இவர்களுடன் வேறு யாருக்கேனும் தொடர்புள்ளதா என விசாரிக்கப்பட்டு வருகிறது. அனைவருமே முகநூலைப் பயன்படுத்தி, ஒருவரையொருவர் தொடர்பு கொண்டுள்ளனர். ஐவரும் தீவிரவாதத்துடன் தொடர்புடைய குற்றங்களுக்கான சட்டப்பிரிவுகளின் கீழ் விசாரிக்கப்பட உள்ளனர்,” என்று காலிட் அபுபாக்கர் மேலும் தெரிவித்தார்.