சிங்கப்பூர் – நேற்று மாலை சிங்கப்பூர் வந்தடைந்த இந்தியப் பிரதமர், நரேந்திர மோடி இரவு 8.00 மணியளவில், ‘சிங்கப்பூர் விரிவுரை’ என்னும் பிரசித்தி பெற்ற பேருரையோடு தனது வருகையைத் தொடங்கியுள்ளார். தென்கிழக்காசிய கல்வி ஆய்வு மையத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்ச்சி ஷாங்ரிலா தங்கும் விடுதியில் நடைபெற்றது.
அவரது உரையை செவிமெடுக்க வந்த சிங்கை பிரதமர் லீ சியன் லுங், மோடியின் உரைக்குப் பின்னர், அவரை அழைத்துக் கொண்டு சிங்கையின் பிரபலமான இந்திய சைவ உணவகமான கோமள விலாசுக்கு இரவு உணவுக்கு அழைத்துச் சென்றார்.
இரவு உணவுக்குப் பின்னர் மோடி லீ சியன் லுங் தம்பதியருடன் எடுத்துக் கொண்ட தம்படம் (செல்ஃபி)
இரவு உணவுக்குப் பிறகு, லீ சியன் லுங், மோடியை அழைத்துக் கொண்டு, தீபாவளியை முன்னிட்டு, வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த சிராங்கூன் பகுதியை சுற்றிக் காண்பித்தார்.
“சிங்கப்பூருக்கும்-இந்தியாவுக்கும் இடையிலான வலுவான நல்லுறவுகள் 50 ஆண்டுகள் நிறைவை வெற்றிகரமாக எட்டியிருப்பதைக் குறிக்கும் வகையில் எனது சிங்கப்பூர் வருகை ஒரு முக்கியமான தருணத்தில் அமைகின்றது” என மோடி தனது வருகை குறித்துத் தெரிவித்துள்ளார்.
“சிங்கப்பூருடனான உறவுகள் குறித்து இந்தியா காட்டும் முக்கியத்தும் அளவிடற்கரியது. சிங்கப்பூர் இந்தியாவின் முன்னணி முதலீடு நாடுகளில் ஒன்று. பல இந்திய நிறுவனங்கள் சிங்கைக்கு தங்களின் வணிகத்தை விரிவுபடுத்தியுள்ளன. எனது சிங்கை வருகை நகர்ப்புற மேம்பாடு, நகர்ப்புற போக்குவரத்து, கழிவு சுத்திகரிப்பு மற்றும் நிர்வாகம், துறைமுகங்களின் மேம்பாடு, கைத்திறன் தொழில் வளர்ச்சி ஆகிய அம்சங்களை மையமிட்டு எனது வருகை அமைந்திருக்கும்” என்றும் தனது சிங்கை வருகை குறித்து மோடி தனது முகநூலில் (பேஸ்புக்) பதிவிட்டுள்ளார்.
பல்வேறு தலைவர்களைச் சந்திப்பதோடு, சிங்கை முதலீட்டாளர்களோடு சந்திப்பு ஒன்றையும் மோடி நடத்தவிருக்கின்றார்.
எஸ்பிளனேட் என்ற இடத்திலுள்ள இந்திய தேசிய இராணுவ வீரர்களுக்கான நினைவு இடத்திற்கும் மோடி வருகை தந்து அஞ்சலி செலுத்துவார்.
“சுமார் 350,00 இந்திய வம்சாவளியினரைக் கொண்ட சிங்கப்பூரில், அவர்களைச் சந்தித்து நவம்பர் 24ஆம் தேதி (இன்று) மாலை உரையாடவிருக்கின்றேன். எனது சிங்கப்பூர் வருகையின் மூலம் இருநாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்புகள் பலப்படுத்தப்பட்டு, அதன் காரணமாக இரு நாடுகளும் பயன் பெறும்” என்றும் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.