சென்னை – டாஸ்மாக்கிற்கு எதிராக பாடல்களைப் பாடியதால் தேச துரோக வழக்கில் கைது செய்யப்பட்ட பாடகர் கோவன், சமீபத்தில் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார். இந்நிலையில் அவர், நேற்று கோபாலபுரத்தில் திமுக தலைவர் கருணாநிதி மற்றும் பொருளாளர் ஸ்டாலினை சந்தித்து பேசினார்.
அவர் கைதான சமயத்தில் அதிமுகவைத் தவிர்த்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கடும் கண்டனங்களைத் தெரிவித்தனர். மதிமுக செயலாளர் வைகோ, கோவனின் பாடலை பாடி அரசுக்கு துணிவிருந்தால் என்னையும் தேச துரோக வழக்கில் கைது செய்யட்டும் என முழங்கினார்.
இந்நிலையில் கோவன், கருணாநிதியை மட்டும் சந்தித்ததற்கான காரணங்கள் தெரியவில்லை. இது குறித்து கோவன் தரப்பு வெளியிட்டுள்ள தகவலில், கோவன் கைதான சமயத்தில் தனக்காக குரல் கொடுத்த திமுகவுக்கு நன்றி கூறுவதற்காகவும், மது ஒழிப்பை வலியுறுத்தி நடத்தவிருக்கும் போராட்டத்தில் திமுகவும் கலந்து கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுப்பதற்காகவும் கருணாநிதியை, கோவன் சந்தித்ததாக தெரிவித்துள்ளனர்.
மது ஒழிப்பிற்காக குரல் கொடுத்த கோவன், இதுவரை நடுநிலையாளராகவே பார்க்கப்பட்டு வருகிறார். ஒருவேளை இன்று கோவன் வைகோ உள்ளிட்ட மற்ற கட்சித் தலைவர்களையும் சந்தித்தால், அவருக்கான நடுநிலையாளர் என்ற அடையாளம் தொடரும், அப்படி இல்லை என்றால் 2016 தேர்தலுக்கு திமுகவிற்கு பிரச்சாரம் செய்ய அடுத்த கட்ட பேச்சாளர் தயார் என்றே பார்க்கப்படுவார் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.