சென்னை – திமுக-அதிமுகவுடன் கூட்டணி இல்லை, அன்புமணி தான் முதல்வர் வேட்பாளர் என வெளிப்படையாகக் கூறி தேர்தலுக்கான பரபரப்பை முதலில் ஏற்படுத்திய கட்சி பா.ம.க தான். இந்நிலையில், மாவட்ட வாரியாக அன்புமணி சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டியில், தேமுதிகவும் எங்கள் கூட்டணியில் வர வேண்டும் என பகிரங்க கோரிக்கையை விடுத்துள்ளார்.
தேர்தலுக்கு முன்பு வரை ஆவேசம் காட்டும் பாமக, தேர்தல் சமயத்தில் ஏதோ ஒரு கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொள்ளும் என பா.ஜ கட்சியின் மூத்த தலைவர் இல.கணேசன் கூறியுள்ள நிலையில், அதனை மெய்பிக்கும் வகையில் தான் தேமுதிகவை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் பாமக இறங்கி உள்ளது
வட மாவட்டங்களில் பா.ம.க-விற்கு எவ்வளவு செல்வாக்கு உள்ளதோ அதற்கு சமமான அளவில் தேமுதிகவிற்கும் உண்டு.ஒருவேளை இரு கட்சிகளும் எதிர் எதிராக நின்றால் அது பா.ம.க-விற்கு தான் பாதகமாக அமையும் என அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ள நிலையில் தான், விஜயகாந்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அன்புமணி இன்று தனது பேட்டியில் கூறியிருப்பதாவது:-
“தமிழகத்தில் ஆளும் கட்சிக்கு எதிரான அலை உருவாகி இருக்கிறது. ஒத்த கருத்துடைய கட்சிகள் எங்களுடன் கைகோர்க்க வேண்டும். தேமுதிக-வுடன் இணைந்து பணியாற்றுவதில் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. கடந்த பாராளுமன்ற தேர்தலில் நாங்கள் இருவரும் ஒரே அணியில்தான் இருந்தோம்” என்று கூறியுள்ளார்.
தற்போதய சூழலில் அதிமுக-வை தவிர மற்ற அனைத்து கட்சிகளும் தேமுதிகவின் வருகைக்காக காத்து இருக்கின்றன. ஆனாலும், விஜயகாந்த் இன்னும் எதற்கும் அசைந்து கொடுக்கவே இல்லை.