கோலாலம்பூர் – முன்னாள் அமைச்சரும், வழக்கறிஞருமான, டத்தோ சைட் இப்ராகிம், ‘பிரதமர் நஜிப்பை பதவியில் இருந்து வீழ்த்த அனைவரும் துன் மகாதீரோடு கைகோர்க்க வேண்டும்’ எனக்கூறியதற்காக நேற்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார்.
கடந்த செப்டம்பர் 2ஆம் தேதி தனது இணைய வலைத்தளப் பதிவில் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்ததன் மூலம், தொடர்பு, பல்ஊடக சட்டத்தின் 233(1)(a) பிரிவின் கீழ், “மற்றவர்களை மனம் நோகடிக்கச் செய்தார்” என்ற நோக்கத்திற்காக அவர் குற்றம் சாட்டப்பட்டார்.
இந்தக் குற்றச்சாட்டு அவர் மீது நிரூபிக்கப்பட்டால், அதிக பட்சமாக 50 ஆயிரம் ரிங்கிட் அபராதம் அல்லது ஒரு வருடத்துக்கும் மேல்போகாத சிறைத் தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
கீழ்நிலை அமர்வு நீதிமன்றத்தில் (செஷன்ஸ் நீதிமன்றம்) நீதிபதி ஜக்ஜிட் சிங் பாண்ட் சிங் முன்னிலையில் அவர் குற்றம் சாட்டப்பட்டார்.
சைட் இப்ராகிமுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்ட பின்னர், தொடக்கநிலை ஆட்சேபங்களைத் தெரிவித்த அவரது வழக்கறிஞர் புரவலன் முத்துராமன் “மற்றவர்களை நோகடிக்கச் செய்த வாசகங்கள் முழு கட்டுரையுமா அல்லது சில பகுதிகள்தானா என்பது குறிப்படப்படவில்லை. வழக்கின் குற்றச்சாட்டு பொதுமக்களை மனம் நோகச் செய்திருக்கின்றது எனக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. ஆனால், அந்தக் கட்டுரை பிரதமர் நஜிப் பெயரை மட்டும்தான் குறிப்பிடுகின்றது” எனத் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து இந்த முதல் கட்ட ஆட்சேபங்கள் மீது விசாரணை நடத்த எதிர்வரும் ஜனவரி 22ஆம் தேதிக்கு வழக்கை நீதிபதி ஒத்தி வைத்தார்.
சைட் இப்ராகிமுக்கு ஜாமீன் தொகை எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை.
குற்றச்சாட்டுக்குப் பின்னர் நீதிமன்றத்தில் பத்திரைக்கையாளர்களிடம் பேசிய சைட் இப்ராகிம், தான் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுவது இதுதான் முதல் முறை என்றும் பிரதமரைக் குறை சொல்வதற்காக ஒருவர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுவது இதுவே கடைசி முறையாக இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.
“பிரதமரைக் குறை கூறுவதற்காக மக்களை நீதிமன்றத்தில் குற்றம் சாட்டுவது கேலிக்கூத்தானது” என்று சாடிய சைட் இப்ராகிம் தலைவர்கள் சட்டத்தை தங்களுக்கு சாதகமாக திசை திருப்ப முயற்சி செய்யும்போது, அதற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டியது அவசியம் என்றார்.
மக்களைப் பார்த்து தலைவர்கள் பயப்பட வேண்டும், அதற்காக நாமும் அஞ்சாமல் துணிந்து பேச வேண்டும் என்றும் சைட் இப்ராகிம் வலியுறுத்தினார்.