இலண்டன் – கிழக்கு இலண்டன் பகுதியில் உள்ள லெயிட்டன்ஸ்டோன் இரயில் நிலையத்தில் உள்நாட்டு நேரப்படி நேற்று மாலை 7.00 மணியளவில் நபர் ஒருவன் அனைவரையும் கத்தியால் தாக்கிக் கொண்டிருக்கின்றான் என்ற தகவல் தெரிவிக்கப்பட இலண்டன் காவல் துறையினர் உடனடியாக அங்கு விரைந்துள்ளனர்.
இதனால் ஒருவருக்கு கடுமையான கத்திக் குத்துக் காயங்கள் ஏற்பட்டதோடு, மற்ற இருவருக்கு சிறிய அளவிலான காயங்கள் ஏற்பட்டன. மின் அதிர்ச்சி தரும் துப்பாக்கியின் துணை கொண்டு, தாக்குதல்காரன் மீது எதிர்த் தாக்குதல் தொடுத்து காவல் துறையினர் அவனைக் கைது செய்துள்ளனர்.
ஏறத்தாழ பத்தே நிமிடங்களில் முடிவுக்கு வந்த இந்த சம்பவத்தை பயங்கரவாதம் தொடர்புடைய செயல் என காவல்துறையினரின் முதல் கட்ட விசாரணைகளின் வழி தெரிய வந்துள்ளது.
இதைத் தொடர்ந்து இலண்டனிலும் மேலும் பயங்கரவாதச் செயல்கள் அரங்கேறக்கூடும் என்ற அச்சம் பரவி வருகின்றது. காவல் துறையினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய சம்பவம் காரணமாக சில பகுதிகளுக்கான இரயில் சேவை தடைப்பட்டது என்பதோடு, சில பகுதிகளுக்கான சேவைகளில் தாமதமும் ஏற்பட்டது.