கோலாலம்பூர் – இன்று அம்னோ பேரவை தொடங்கும் நிலையில், நேற்று கோலாலம்பூர் மலாய்க்காரர்களின் மையமான கம்போங் பாருவில் உள்ள அரங்கத்தில் தனது ஆதரவாளர்களிடையே உரையாற்றிய முன்னாள் துணைப் பிரதமரும், அம்னோ துணைத் தலைவருமான டான்ஸ்ரீ மொகிதின் யாசின், பிரதமர் நஜிப் 1எம்டிபி தொடர்பான விசாரணைகள் நியாயமாகவும், பாரபட்சமின்றியும் நடைபெறுவதற்கு வழிவிட்டு, தனது பதவியிலிருந்து விலகி, விடுப்பில் செல்ல வேண்டுமென்று பகிரங்க கோரிக்கை விடுத்தார்.
அவருடன் முன்னாள் பிரதமர் துன் மகாதீரும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டார். இதன் மூலம், ஒரு வித்தியாசமான அரசியல் மாற்றம், மீண்டும் அரங்கேறத் தொடங்கியுள்ளது. 1998ஆம் ஆண்டில் துணைப் பிரதமராக இருந்த அன்வார் இப்ராகிம் கட்சியிலிருந்து விலக்கப்பட, அவர் நாடு முழுக்க மகாதீருக்கு எதிராக மக்கள் சந்திப்புக் கூட்டங்களை நடத்தினார்.
இப்போது அதே போன்று, மொகிதின் யாசின் துணைப் பிரதமர் பதவியிலிருந்து தூக்கியெறியப்பட அவரும் அன்வார் வழியில் மக்கள் சந்திப்புக் கூட்டங்களை நடத்தத் தொடங்கியுள்ளார். அன்று அன்வாரைக் கட்சியிலிருந்து நீக்கிய துன் மகாதீரும் இன்று மொகிதினுடன் கைகோர்த்து மேடைகளில் பிரச்சாரத்தில் இறங்குவதுதான் இப்போது நடந்து கொண்டிருக்கும் அதிசயிக்கத்தக்க அரசியல் மாற்றமாகும்.
இந்த அரசியல் திருப்பங்களின் மூலம் – நேற்றைய மொகிதின் உரையின் மூலம் – இன்று அம்னோ இளைஞர், மகளிர் பொதுப் பேரவைகளோடு தொடங்கும் அம்னோவின் வருடாந்திர பொதுப்பேரவை மிகுந்த பரபரப்புடன், நெருக்கடியான சூழலிலும் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அம்னோ தலைவர் பதவி வகிக்கும் காலம் – கட்டுப்பாடு தேவை!
அம்னோவின் தலைவர் பதவியை ஒருவர் ஆறு ஆண்டுகள் அல்லது இரண்டு தவணைகளுக்கு மட்டுமே வகிக்க வேண்டுமென கட்டுப்பாடு விதிக்கப்பட வேண்டும் எனவும் மொகிதின் அறைகூவல் விடுத்துள்ளார்.
“முதலில் நடுநிலையான, வெளிப்படைத் தன்மையோடு, 1எம்டிபி மீதிலான விசாரணைகள் யாருடைய தலையீடும் இன்றி நடைபெற வேண்டும். விசாரணைகளின் முடிவில் நஜிப் குற்றமற்றவர் என்றால் அவர் தொடர்ந்து அம்னோ தலைவராகவும், பிரதமராகவும் பதவி வகிக்கட்டும்” என்றும் மொகிதின் கூறினார்.
“எனது தனிப்பட்ட நலனுக்காக நான் நஜிப்பைப் பதவி விலகச் சொல்லவில்லை. உங்களின் மனசாட்சிப்படி நடந்து கொள்ளுங்கள்- நாட்டுக்காக சரியானதைச் செய்யுங்கள் என்று மட்டுமே நஜிப்பைக் கேட்டுக் கொள்கின்றேன்” என்றும் மொகிதின் கூறியிருக்கின்றார்.
இதனைத் தொடர்ந்து, மொகிதினுக்கு அம்னோ பொதுப் பேரவையில் பேசுவதற்கு வாய்ப்பு வழங்கப்படுமா அல்லது அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு, கட்சியிலிருந்தே அவர் நீக்கப்படுவாரா என்பது போன்ற கேள்விகள் பரபரப்பாக எழுந்துள்ளன.