கோலாலம்பூர் – கடந்த சனிக்கிழமை புற்றுநோயால் காலமான ஜோகூர் இளவரசர் துங்கு அப்துல் ஜாலில் சுல்தான் இப்ராகிமிற்கு, அவரது தாய் ராஜா சாரித் சோஃபியா சுல்தான் இட்ரிஸ் உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:-
“எனக்கு ஞாபகம் இருக்கிறது, ஒருமுறை நீ கண்ணை மூடியவுடன், கண்ணீர் வழிந்து கன்னத்தில் ஓடியது, நீ வலியுடன் போராடிக் கொண்டிருந்தாய், நான் உனது இடது கையைப் பற்றினேன். நான் அழுதேன், எந்தச் சத்தமும் இன்றி கடினமாக முயற்சி செய்தேன்”
“நான் அழுவதை நீ பார்க்கக் கூடாது என்று நினைத்தேன். காரணம் உனது கண்கள் மூடியிருந்தது. ஆனால் உனக்குத் தெரியும். நீ உனது வலது கையை என் மீது வைத்து தட்டிக் கொடுத்து, ‘அழாதே.. நான் சரியாகிவிடுவேன்’ என்று கூறினாய்’ இவ்வாறு இன்று தனது பேஸ்புக் பதிவில் ராகா சாரித் சோஃபியா சுல்தான் இட்ரிஸ் கூறியுள்ளார்.
மேலும், ராஜா சாரித் கூறுகையில், தனது துயரங்களை எல்லாம் அல்லாஹ் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற குறுஞ்செய்தி உட்பட தனக்கு துங்கு ஜாலில் அனுப்பிய அனைத்து குறுஞ்செய்திகளையும் தன்னால் நினைவில் கொள்ள முடியும் என்று ராஜா சாரித் தெரிவித்துள்ளார்.
மருத்துவமனையில் துங்கு ஜாலில் இருந்த நேரத்தில், மொத்த குடும்பமும் அவருடன் அதிக நேரம் செலவு செய்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடைசியாகக் கல்லறையில் துங்கு ஜாலிலைப் பார்த்த போது, தனது இதயம் வலித்ததாகவும் ராஜா சாரித் தெரிவித்துள்ளார்.
“நான் உனது தந்தை மற்றும் உனது சகோதரர்கள் அங்கிருந்தார்கள், அப்போது பூ மற்றும் இன்னா என் அருகே நின்றிருந்தார்கள். நான் உனது சகோதரர்களைப் பார்த்தேன். எனது மூன்று மகன்கள் இருந்தனர். பூ எனக்கு அருகில் இருந்தாள்.”
“நீங்கள் ஐந்து பேர் இருந்தீர்கள். எங்கே எனது 4 வது மகன்? அதன் பின்னர் தான் நான் உணர்ந்தேன் நீ அங்கு இல்லை என்று. நீ மண்ணுக்குள் சென்றுவிட்டாய் என்பதை மறந்துவிட்டேன்.” இவ்வாறு ராஜா சாரித் மிகவும் உருக்கமாகக் கடிதம் எழுதியுள்ளார்.