கோலாலம்பூர் – கடந்த மூன்று மாதங்களாக, நள்ளிரவில், தங்களது கைப்பேசிகளுக்கு பல ‘ஆபாச அழைப்புகள்’ வருவதாக பெர்சே நடப்புத் தலைவர் மரியா சின் அப்துல்லா மற்றும் பெர்சேவின் முன்னாள் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன் ஆகிய இருவரும் தெரிவித்துள்ளனர்.
“ஒரு இரவுக்கு எவ்வளவு வாங்குகிறீர்கள்? எப்போது வரலாம்? என்று கேட்கிறார்கள்” என மரியா தெரிவித்துள்ளார்.
இந்தத் தொல்லை, பெர்சே 4-க்கு பிறகு தான் ஆரம்பித்ததாகவும், கடந்த செப்டம்பர் மாதம் இப்படியான முதல் அழைப்பு வந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல், வாட்சாப்பிலும் ‘மிகவும் மோசமான’ வார்த்தைகளில் தகவல்கள் வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இன்று மரியாவின் கைப்பேசி எண்ணிற்கு டிபிகேல் (கோலாலம்பூர் மாநகராட்சி மன்றம்) அனுப்பியுள்ள குறுஞ்செய்தியில், அதிகாரப்பூர்வமற்ற விளம்பரம் செய்ததால், கைப்பேசி எண்ணை முடக்குவதாக அறிவித்துள்ளது.
அதிகாரப்பூர்வமற்ற விளம்பரங்களை செய்துள்ளதால், சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் டிபிகேஎல் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், அம்பிகாவும் தனக்கு வரும் ‘ஆபாச அழைப்புகள்’ குறித்து தகவல் தெரிவித்துள்ளார்.
“தனக்கும், மரியாவிற்கும் அது போன்ற அழைப்புகள் வருவதாக மந்தீப் (சிங்) சொல்லும் வரை எனக்கும் உண்மையில் என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. எங்களது கைப்பேசி எண்கள் எங்கேயோ விளம்பரப்படுத்தப்பட்டுள்ளன என அவர் எண்ணுகின்றார்” என்று அம்பிகா தெரிவித்துள்ளார்.
இதனிடையே, மந்தீப் கூறுகையில், தனக்கு வந்த அழைப்பில் பேசியவரிடம், “எப்படி எனது எண் கிடைத்தது?” என்று கேட்டதாகவும், அதற்கு அவர் சௌகிட் பகுதியில் உள்ள ஒரு சுவற்றில் ஒட்டப்பட்டிருந்தது என்று கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.