மும்பை – குடிபோதையில் சாலையில் படுத்திருந்தவர் மீது காரை ஏற்றிக் கொன்ற வழக்கில், மும்பை செஷன்ஸ் நீதிமன்றம் கடந்த மே மாதம் நடிகர் சல்மான்கானுக்கு 5 வருட சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. அதனை எதிர்த்து சல்மான் மேல் முறையீடு செய்தார். விசாரணையில் இருந்த அந்த வழக்கின் இறுதித் தீர்ப்பு இன்று வெளியாக உள்ளது.
இதற்கிடையே, சல்மான்கான் தான் காரை ஓட்டினார் என அரசு தரப்பு வழக்கறிஞர் நிரூபிக்க தவறிவிட்டார் என மும்பை நீதிமன்றம் கூறியுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஏ.ஆர்.ஜோஷி, “விபத்து நடந்த அன்று நடிகர் சல்மான்கான் குடிபோதையில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்தினார் என்பதை அரசு தரப்பு நிரூபிக்க தவறிவிட்டது. சல்மானுக்கு எதிராக அவரது முன்னாள் பாதுகாவலர் கூறிய சாட்சியமும் சந்தேகத்தை கிளப்புகிறது.”
“அவர் முதலில் கூறிய சாட்சியத்தை பின்னாளில் மாற்றிக் கூறி நம்பகத்தன்மையை இழந்துவிட்டார். காவல்துறையினரும் சல்மான்கானுடன் உடன் இருந்ததாகக் கூறப்படும் அவரது நண்பர் கமால் கானிடம் விசாரிக்காமல் இருந்துவிட்டனர்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் சல்மான்கான் விடுதலையாவது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது.